Friday 19 July 2013

கடனில் மூழ்குதா இந்தியா


கடனில் மூழ்குதா இந்தியா
ஜி.சுரேஷ்
வெளிநாட்டு கடன்களுக்கு வட்டிவிகிதம் குறைவு என்பதால் சாலை, சாக்கடையென அனைத்து திட்டங்களுக்கும் வெளிநாட்டு கடனை மத்திய அரசு வாங்கிக் குவிக்கிறது. புதியப் பொருளாதாரக் கொள்கையின் விளைவாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் 10சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவது லட்சியம் என்றும் கூறி வந்த மத்திய அரசு அதற்காக நம் நாட்டில் உள்ள கார்ப்பரேட் பகாசுர கம்பெனிகள் வெளிநாட்டிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு ஏழு கோடி டாலர் வரை குறுகிய கால கடன் வாங்கி கொள்வதற்கு அனுமதியளித்தது. நமது நாட்டின் வட்டிவிகிதத்தோடு ஒப்பிடும்போது வெளிநாட்டு கடனுக்கான வட்டி குறைவு என்பதால் கார்ப்பரேட் கம்பெனிகள் பெரும் தொகை கடன் பெற்றன.
பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் ஏற்றுமதியை அதிகரித்து கடன்களை அடைக்கலாம் என்று நிதியமைச்சகம் கருதியது. ஆனால் நேர்மாறாக நடந்துவிட்டது. கடந்த பத்தாண்டுகளில் கண்ட பொருளாதார வளர்ச்சியின் மிக குறைந்த அளவு வளர்ச்சியால் கனவு பொய்த்து போனது. ஏறத்தாழ 32 ஆயிரம் கோடி டாலர் வெளிநாட்டிலிருந்து கடன்பட்டுள்ளோம். 2014 மார்ச் 31க்குள் 17,200 கோடி டாலா வெளிநாட்டுக் கடனை அடைத்தே தீரவேண்டும். நமது கையிருப்பின் 60 சதவீதம் எடுத்தால் மட்டுமே இக்கடனை அடைக்க இயலும். இப்படி செய்ய நேரிட்டால் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்துவிடும். 2002 - 03 நிதியாண்டில் இந்திய நாட்டின் வெளிநாட்டு குறுகிய கால கடன் அந்நிய செலாவணி இருப்பின் 5.1 சதவீதமாக இருந்தது. 2008 -09 இது 14.8 சதவீதமாக வளர்ந்து தற்போது 60.1 சதவீதத்தில் எட்டி நிற்கிறது.கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசு கடைப்பிடித்து வந்த பொருளாதார கொள்கையால் 1990-91 ம் ஆண்டில் மெக்சிகோ, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் சந்தித்த பொருளாதார வீழ்ச்சிக்கு ஒப்பான ஆபத்தான நிலையில் நமது பொருளாதாரம் எட்டியுள்ளது. 1990 ல் நமது நிதி பற்றாக்குறையை சமாளிக்க அன்றைய பிரதமர் ரிசர்வ் வங்கியிலிருந்து 47டன் தங்கத்தை யூனியன் பாங் ஆப் இங்கிலாந்திலும் 20 டன் தங்கத்தை யூனியன் பாங் ஆப் சுவிட்சர்லாந்திலும் அடகு வைத்தனர்.
அதுவரை இருந்த பொருளதாரக் கொள்கைதான் அத்தகைய நிலை ஏற்பட காரணம் என்றும் இந்தியாவை வளர்க்க புத்தம் புதிய கொள்கை கொண்டுவருவதாகவும் அதன்பிறகு நிதியமைச்சரான இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கும் தொடர்ந்து வந்தஅரசுகள் காங்கிரஸ் பாரதிய ஜனதா என்ற பேதமில்லாமல் அதே கொள்கையை கடைபிடித்தனர். இதுதான் இந்தியாவின் இன்றைய நிலைக்கு காரணம்.இறக்குமதியோடு ஒப்பிடும்போது ஏற்றுமதி கணிசமாக குறைந்துள்ளது.இதனால் பற்றாக்குறையும் வரலாற்றில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. 2014 மார்ச் இறுதிக்குள் 17,200 கோடி டாலர் வெளிநாட்டு கடன் அடைக்க என்ன செய்யபோகிறது மத்திய அரசு. இறக்குமதியை கட்டுப்படுத்தியும் ஏற்றுமதியை ஊக்குவித்தும், இப்பிரச்சனையை சமாளிக்க இன்றைய நிலையில் இயலாது. அடுத்த ஒரு வழி மேலும் கடன் பெறுவதுதான். கடந்தாண்டு 8500 கோடி டாலருக்கான கடன் பத்திரங்களை யுஎஸ் மத்திய வங்கி வழங்கியது. ஆனால் கடன் பத்திரங்களை பெற்று கூடுதல் தொகை வழங்கி வந்த அமெரிக்கன் மத்திய வங்கி கடன் வழங்குவதை சுருக்கியுள்ளது. மற்ற நாடுகளும் பெரும் தொகை கடன் வழங்கும் நிலையில் இல்லை. ஒரு வேளை கடன் கிடைத்தாலும் வேறு பிரச்சனைகள் உள்ளது. யு.எஸ். மத்திய வங்கியின் வட்டிவிகிதம் உயரும் நிலையில் உள்ளது.
தற்போதுள்ள ரூபாயின் மதிப்பு சரிவும் இத்துடன் வட்டியும் உயர்ந்தால் ஏற்கனவே கடன் வாங்கிய கம்பெனிகள் நிதி நெருக்கடியில் சிக்கும் வாய்ப்புள்ளது. இது தொழில் துறை வளர்ச்சியை தடுக்கும். அதனால் நாட்டின் வளர்ச்சி விகிதம் மேலும் குறையும் ஆபத்து ஏற்படலாம். இதே நிலை தொடர்ந்தால் பொருளாதார பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுவதும் இந்திய நாட்டு பொருளாதார அமைப்புகளை கறுப்புப் பட்டியலில் சேர்க்கவும் நேரிடும். இது நமது பொருளாதாரத்தை 1990 விட மோசமான நிலைக்கு இழுத்துச் செல்லலாம்.1990 களில் துவங்கி அமலாக்கிவரும் கொள்கையால் இந்தியாவில் பல கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனால் உலகிலேயே ஊட்டச்சத்து குறைவுள்ள குழந்தைகளில் 40 சதவீதம் இந்தியாவில் உள்ளனர். பிறக்கும் போதே 32 சதவீதம் குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. பிறந்து 47 சதவீதம் இறந்துவிடுகின்றது என்பதும் ஒவ்வொரு ஆண்டும் 4 வயதிற்குட்பட்ட 2 லட்சம் குழந்தைகள் மரணமடைகின்றனர் என்பதும் சாதாரண ஏழை, எளிய மக்களின் சூழ்நிலை மிகவும் மோசமாகி வருகிறது என்பதும் பல ஆய்வுகளில் வெளிவந்துள்ளது.மன்மோகன் சிதம்பர பொருளாதார கொள்கை நாட்டு மக்களுக்கு உதவவில்லை. இன்று நாட்டை கடனில் மூழ்கடித்துள்ளது. ஆனாலும் இதே நாசகர கொள்கைதான் தொடருவோம் என்கிறார்கள். மாற்றத்துக்கான தேடல் உடனடி தேவை.கட்டுரையாளர் : மாநிலக்குழு உறுப்பினர், சிஐடியு

No comments:

Post a Comment