Tuesday 20 April 2021

 வரலாற்று சாதனை- ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை தொகையில் 20.47 கோடி ரூபாய்கள் இன்று பட்டு வாடா செய்யப்பட்டது.

BSNL நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற பெயரில், உழைப்பு சுரண்டல் கடுமையாக நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது. சுரண்டப்பட்டு வரும் அந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தர வேண்டிய ஊதியத்தையும் வருடக்கணக்கில், நிர்வாகம் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டு வருகிறது.

ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ் நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கமும், BSNL ஊழியர் சங்கமும் இணைந்து நடத்திய போராட்டம் ஏராளம்.. ஏராளம்...

ஆனாலும் நிர்வாகம் அசைய மறுத்தது. வேறு வழியின்றி நீதி மன்றத்தை நாடுவது என்று முடிவு செய்யப்பட்டது. உழைக்கும் மக்கள் நீதியை பெறுவது கூட அசாதாரனமானது என்பதை புரிந்துக் கொண்ட நமது சங்கங்கள், உழைக்கும் மக்களின் சிரமங்களை முழுமையாக புரிந்துக் கொண்ட ஒரு வழக்கறிஞர், அதுவும் ஒரு மூத்த வழக்கறிஞர் தேவை என்பதை உணர்ந்து, பிரபல வழக்கறிஞர் தோழர் N.G.R.பிரசாத் அவர்களை உரிய முறையில் அணுகினோம். அவர் ஒரு பைசா கூட முன்பணம் வாங்காமல் ஏற்றுக் கொண்டு திறம்பட வாதாடினார். அவரது வாத திறமையால் இன்று நமது நெடு நாளைய காத்திருப்பு ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

முதல் கட்டமாக 1857 ஒப்பந்த தொழிலாளிக்கு 6.10 கோடி ரூபாயும், இரண்டாம் கட்டமாக 2902 ஒப்பந்த தொழிலாளிக்கு 8.40 கோடி ரூபாயும், மூன்றாவது கட்டமாக இன்று (20.04.2021) 4668 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20.47 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 34.98 கோடி ரூபாய் நீதி மன்ற உத்தரவு மூலம் பெற்றுள்ளோம். மொத்தத்தில் 4759 ஒப்பந்த தொழிலாளிகளுக்கு சுமார் 34.98 கோடி ரூபாயை ஒப்பந்தகாரர்களுக்கு பதிலாக மத்திய தொழிலாளர் நல அதிகாரிகள் மூலம் பெற்று சரித்திர சாதனை படைத்து விட்டோம்..

இது சாதாரண நிகழ்வு அல்ல..

தமிழகத்தின் அனைத்து தொழிற்சங்க வரலாற்றில் முக்கியமான சாதனை.. BSNL-லில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத வெற்றி..

வழக்கு மன்றத்தில் நமக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் மரியாதைக்குரிய திரு N.G. R பிரசாத் மற்றும் வழக்கறிஞர்கள் சதீஸ்குமார், ராம் சித்தார்த் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்..

நமக்காக உழைத்திட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கும் நமது நன்றிகளும், வாழ்த்துக்களும்...

நமக்கு மிகச்சரியாக வழிகாட்டிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்னாள் தலைவர் தோழர் P.சம்பத் அவர்களுக்கும், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்களுக்கும், BSNLCCWF பொதுச்செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா அவர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்,...

நமது சங்கங்களின் மீது நம்பிக்கை வைத்து, கடுமையான பிரச்சனைகளை சந்தித்த போதும், உறுதியாக சங்கங்களின் பின் நின்ற அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், அவர்களுக்கு எப்போதும், ஆதரவாக அரவணைத்து நின்று வழிகாட்டிய BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்ட, கிளை மட்ட தலைவர்களுக்கும், உதவிக்கரம் நீட்டிய ஓய்வூதியர்களுக்கும் தமிழ் மாநில சங்கத்தின் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்....

வாங்கிய சம்பளத்தில் உள்ள முரண்பாடு, EPF, ESI பிரசனை ஆகியவற்றை அடுத்து சரி செய்வோம்.

நாம் தோற்றதில்லை.. தோற்கப் போவதுமில்லை..

Friday 9 April 2021

காலம் 30.09.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 BSNL ஓய்வூதியர்களின், BSNL MRS அட்டையின் காலம் 30.09.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

BSNL ஓய்வூதியர்களின், BSNL MRS அட்டையின் காலம் இதற்கு முன்னர், 30.03.2021 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. கொரோனா பெருந்தொற்றின் அபாயம் அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு, BSNL ஓய்வூதியர்களின், BSNL MRS அட்டையின் காலத்தை, 30.09.2021 வரை, அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நீட்டித்து, கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

 மார்ச் மாத ஊதியம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தும், ஏப்ரல் மாத ஊதியத்தை உரிய தேதியில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் CMD BSNLக்கு கடிதம்

2021 மார்ச் மாத ஊதியத்தை வழங்கியதற்காக, ஊழியர்கள் சார்பாக, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள், CMD BSNLக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். மேலும், ஒவ்வொரு மாதமும் கால தாமதமாக ஊதியம் வருவதால் ஏற்படும் சிரமங்களில் இருந்து ஊழியர்களை காப்பாற்றும் விதமாக, ஏப்ரல் மாத ஊதியத்தை உரிய தேதியில் வழங்க வேண்டும் என்றும், அவர் அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Sunday 4 April 2021

சர்வதேச டெண்டர்

 சர்வதேச டெண்டர் மூலம் BSNL நிறுவனம், 4G கருவிகளை வாங்க அனுமதிப்பது என ETG முடிவு.

BSNL நிறுவனத்தின் 4G சேவைகள் துவங்குவது, கடுமையாக தாமதமாக்கப்பட்டு வருகின்றது. 4Gக்கான கேந்திரமான கருவிகளை உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே BSNL வாங்க வேண்டும் என்கிற மத்திய அரசின் நிலைபாடுதான், BSNLன் 4G சேவைகள் துவக்கத்தை தாமதப்படுத்தி வருகின்றது. இந்த தாமதம், BSNL மற்றும் அதன் ஊழியர்களின் எதிர்காலத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனையை, BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக, மத்தியதொலை தொடர்பு அமைச்சர் மற்றும் பிரதமர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றது. சமீபத்தில் கூட, 4G கருவிகளை வாங்க BSNL நிறுவனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என அரசாங்கத்தை வற்புறுத்தி, நாடுமுழுவதும், BSNL ஊழியர் சங்கம் தெருமுனை பிரச்சாரங்களை நடத்தியுள்ளது.

இந்த பின்னணியில், இந்த பிரச்சனை தொடர்பாக, 30.03.2021 அன்று, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு, CMD BSNL இடம் விவாதித்தார். விவாதத்தின் போது, சர்வதேச தயாரிப்பாளர்களான, நோக்கியா, எரிக்சன், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து 4G கருவிகளை வாங்க, பாரத பிரதமரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முதன்மை ஆலோசகர் திரு விஜய ராகவன் தலைமையிலான EMPOWERED TECHNOLOGY GROUP (ETG), BSNLக்கு அனுமதி வழங்கியுள்ளதாக CMD BSNL தெரிவித்தார். இதற்கு தேவையான டெண்டர்களை விடும் பணிகளை, BSNL எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உண்மையில், இது வரவேற்கத்தக்க அம்சம். இது BSNL நிறுவனத்திற்கு ஒரு நிம்மதி பெருமூச்சை கொடுக்கும். எனினும், புதிய டெண்டர்கள் மூலம் கருவிகளை வாங்கி 4G சேவையை வழங்க BSNLக்கு, குறைந்த பட்சம் ஒரு வருட காலம் ஆகும்.