Wednesday 16 October 2013

நெருக்கடிக்குள்ளாகும் தபால் சேவை



நெருக்கடிக்குள்ளாகும் தபால் சேவையின் தேவை

இந்தியாவில் தந்திச் சேவை மூடப்பட்டது சமீபத்தில் பெரிய செய்தியாக ஊடகங்களில் அடிபட்டது. அதே போல பொருளாதார மற்றும் தொழில் நுட்ப மாற்றங்களால், தனது முக்கியத்துவத்தை இழந்துவரும் ஒரு துறையாக இந்தியத் தபால் துறையும் பேசப்பட்டுவருகிறது.
தபால் துறையின் சேவை இன்னும் சமூகத்தின் பல துறைகளில் இருந்து வருகிறது என்றாலும், இந்தியாவின் பொருளாதாரம் 1990களின் ஆரம்ப ஆண்டுகளில் சீர்திருத்தம் செய்யப்பட்டதை அடுத்து, அது வரை அரசாங்கம் ஏகபோகமாக ஆதிக்கம் செலுத்தி வந்த தபால் துறைக்கு, தனியார் துறையிடமிருந்து போட்டி வரத் தொடங்கியது.
1990களின் இறுதியில் இணையம் பெரிதாக வளர்ச்சி கண்ட பிறகு, மின்னஞ்சல் வழித் தொடர்புகளும் பெருகிய நிலையில், தபால் மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வழக்கம் வெகுவாகக் குறைந்து வருவதாகக் கருதப்படுகிறது.
ஆனால் இந்தியா போன்ற முழுதும் நகரமயமாகாத, பெரும்பாலும்,கிராமப்புறங்களில் இன்னும் இணையம், ஸ்மார்ட் போன்கள் ( smartphones) போன்ற தொழில்நுட்பம் அனைத்துத் தரப்பு மக்களையும் எட்டாத நிலையில், தபால் என்கின்ற தகவல் தொடர்பு சாதனம், தனது முக்கியத்துவத்தை அறவே இழந்துவிட்ட்து என்று சொல்ல முடியாது என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில், இந்திய தபால் துறையின் தற்போதைய நிலை என்ன ?
சைக்கிள் மணி அடிக்கும் சத்தத்துடன் , சார் போஸ்ட் என்ற குரல் வீட்டின் முன் ஒலிப்பது என்பது இப்போது அரிதான ஒரு விஷயம். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இந்த குரல் கேட்க காத்திருக்காத குடும்பங்களே இல்லை. மக்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருந்தது தபால் துறை.
வெளியூரில் பணிபுரியும் மகன் அம்மாவிடம் உரையாடுவதும் , திருமணம் செய்து குடுத்த தனது பெண்ணின் நலனை தந்தை அறிவதும், மனைவி பிரிந்த கணவனும், தூரம் சென்ற நண்பர்களும் பேசிக்கொள்ளவும் மனதை பகிர்ந்து கொள்ளவும் தபால் துறையே உதவியது.
இந்தியத் தபால் துறை , உலக தபால் தினத்தை அக்டோபர் 9 முதல் 15 வரை கொண்டாடியது. உலகிலேயே பழமையான தபால் சேவைகளில் ஒன்றாக இந்திய தபால் சேவை இருந்தாலும், அந்த சேவையின் அவசியம் இந்தியாவில் குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
மின் அஞ்சலில் அனுப்ப முடியாத கடிதங்களைக் கூட மக்கள் தபால் துறையை விட தனியார் சேவை மூலமே அனுப்புகின்றனர். காரணம், 2 நாட்களில் இந்திய தபால் துறை கொண்டு சேர்க்கும் ஒரு கடிதத்தை ஒரே நாளில் அதுவும் காலை அனுபினால் மாலை கொண்டு சேர்க்கின்றன தனியார் கூரியர் நிறுவன்ங்கள்.
மக்கள் வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்த இந்திய தபால் துறையின் அவசியம் குறைவது சற்று கவலையே என்றாலும் ,அஞ்சல் சேவையானது புறாவில் துவங்கி , தூதுவர்களில் தொடர்ந்து, தபால்களில் வளர்ந்து இன்று மின் அஞ்சலாய் மாறி காலத்துக்கு ஏற்ற தோற்றம் பெற்று வளர்ந்துகொண்டேதான் போகும் என்பது அனைவரும் ஒப்புகொள்ள வேண்டிய ஒரு உண்மை.


No comments:

Post a Comment