Saturday 12 October 2013

நிஜமா... நாடகமா?

நிஜமா... நாடகமா?
அவசரமாகக் கொண்டுவரப்பட்ட ஓர் அவசரச் சட்டம் அவசரமாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு அரசியல் நிர்பந்தத்தால் எடுக்கப்பட்டது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
அவசரச் சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டபோதிலும், குற்ற வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை பெற்ற ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஷீத் மசூத் ஆகியோர் இதுவரை பதவி நீக்கம் செய்யப்படவில்லை. காரணம்-மாநிலங்களவை அல்லது மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றால், தேர்தல் ஆணையரின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்றாக வேண்டும் என்று அரசியல் சாசன பிரிவு 102, 103 சொல்கிறது. என்ன செய்வது என்று புரியாமல், நாடாளுமன்றச் செயலகம் சட்ட ஆலோசகர்களின் உதவியை நாடியுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8(4)ன்படி, ""90 நாள்களில் மேல்முறையீடு செய்து தண்டனைக்கு தடையுத்தரவு பெற்றுவிட்டால், பதவியில் நீடிக்கலாம்''. இந்தத் துணை விதி, "தேவையில்லாமல் இடம்பெறவில்லை' என்று அரசியல் சாசன அமர்வு 2005 இல் ஒரு வழக்கில் குறிப்பிட்டுள்ள நிலையில், நீதிபதிகள் அமர்வு தற்போது இந்தத் துணை விதியானது சட்டத்தின் நோக்கத்துக்குப் புறம்பானது (மகபதஅ யஐதஉந) என்று கூறியது சரியா? சட்டத் துணை விதியை நீதிமன்றம் ரத்து செய்ய முடியுமா? சட்டத் திருத்தம் கொண்டுவந்து அந்த துணை விதியை நீக்க வேண்டியது நாடாளுமன்றம்தானே? என்ற கேள்விகளுடன், தற்போது தண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத் யாதவ், மற்றும் தண்டனை பெறப்போகும் எம்பிக்கள் சீராய்வு மனு தாக்கல் செய்யக்கூடும்.
சிறைத் தண்டனை பெற்ற எம்பி எம்எல்ஏ-க்களை நீக்குவது குறித்து அரசியல் சாசனப் பிரிவு 102, 103 ஆகியவற்றில் துணை விதிகளைச் சேர்ப்பதும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8(4)-யை நீக்குவதும் மிகமிக அவசியம்.
மேலும், 2 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை பெற்றவர் மட்டும்தான் குற்றவாளியா? அதற்குக் குறைவாகத் தண்டனை பெற்றால் அவர் நல்லவரா? ரூ.50 லஞ்சம் வாங்கினால் குற்றமில்லை, ரூ.50 கோடி வாங்கினால் அதுதான் குற்றம் என்று சட்டம் பேதம் பார்க்கிறதா? ஆகவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8(4) முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
யோசிக்காமல் அவசரச் சட்டம் கொண்டு வந்து அதைத் திரும்பப் பெற்றதன் மூலம் இப்போதைக்குப் பயன் அடைந்திருப்பவர் ராகுல் காந்தி மட்டுமே.
ராகுல் காந்தியின் இந்தத் திடீர் எதிர்ப்பு அவரை அரசியல் முதிர்ச்சி உள்ளவராக, நேர்மையான அரசியலை விரும்பும் தலைவராக, தவறு செய்வோர் யாராக இருந்தாலும் - பெற்ற தாய் தடுத்தாலும் விடேன் என்பதாகவும் ஒரு தோற்றத்தை நாடு முழுவதிலும் ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியே கதிகலங்கி அவசரச் சட்டத்தை விலக்கிக்கொள்ளும் அளவுக்கு தனியொரு தலைவன் ராகுல் காந்தி என்பதான பேச்சுக்கு வழி ஏற்படுத்தப்பட்டது.
இதில் எதிர்க்கட்சிகள், குறிப்பாக பாஜக எழுப்ப மறந்த கேள்விகள் இருக்கின்றன. "மற்ற ஊழல்களில் ஏற்படாத கோபம், இந்த அவசரச் சட்டத்தில் மட்டும் எப்படி ஏற்பட்டது? உள்கட்சி விவகாரத்தை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்ளலாமா? வேறு நபர் செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?' என்பதையெல்லாம் யாரும் கேள்வி எழுப்பவில்லை. தற்போது ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளதால் சீமாந்திரத்தில் நடைபெற்றுவரும் கலவரத்தைக் கண்டு, ஆந்திரத்தைப் பிரிக்கும் முடிவையும் ராகுல் காந்தி நான்சென்ஸ் என்று சொல்வாரா என்றுகூட சிலர் கேட்டாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
தற்போது, குற்றதண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏ-க்கள் பதவி இழக்காமல் காப்பாற்றிய அவசரச் சட்டத்தை விலக்கிக்கொண்டு விட்டதோடு மத்திய அரசு தனது கடமை முடிந்தது என்று இருத்தல் கூடாது. அப்படி இருந்துவிட்டால், ராகுல் காந்தி விமர்சனமும் அவசரச் சட்டத்தை திரும்பப் பெற்றதும் வெறும் நாடகம் என்றாகிவிடும்.
குற்றப் பின்னணி உள்ளவர்கள் காப்பாற்றப்படக் கூடாது என்று ராகுல் காந்தி நிஜமாகவே, உணர்வுபூர்வமாக விரும்புகிறார் என்றால், அரசியல் சாசனப் பிரிவு 102, 103 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவு 8(4)-துணை விதியை முற்றிலுமாக நீக்கிவிடுவதற்கான சட்டத் திருத்தத்தை, உடனடியாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் ராகுல் காந்தியின் திடீர் கோபம் வெறும் "நான்சென்ஸ்!'

 Dinamani

No comments:

Post a Comment