Tuesday, 15 October 2013

கல்லூரி முதல்வர் கொலை : விவாதிக்க வேண்டிய தளங்கள்



கல்லூரி முதல்வர் கொலை : விவாதிக்க வேண்டிய தளங்கள்

ஒரு நீண்ட மவுனத்திற்குப் பின் தான் இந்த சமூகம் பல விஷயங்களை விவாதித்துக் கொள்ள தயாராகிறது.
ஆழ்ந்த இரங்களோடு தான் நாமும் தூத்தூக்குடி, தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ் அவர்களின் கொலைச் சம்பவத்தினை பேச வேண்டியுள்ளது. கல்லூரி முதல்வரினை கொலை செய்தவர்கள் யார்? என்பதோடு கொலை செய்தவர்களின் மனத்தினை கொன்றது யார்? என்கிற விவாதமே இந்தச் சமூகத்திற்கு அவசியமானது ஆகும்.
இந்தச் சம்பவத்தோடு, ஒட்டுமொத்த சமூகத்தினையும் பொருத்திப் பார்ப்பதே சரியான நடவடிக்கையாக அமையும். இல்லையென்றால் இது அந்த மூன்று மாணவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளாகவே பார்க்கப்படும்.இந்த நிகழ்வினை ஒட்டு மொத்த சமூகமும்,தமிழக கல்விச் சூழலும் தன்னை சீர்தூக்கி பார்க்கின்ற நிகழ்வாக மாற்றிட வேண்டிய தேவை நம்முன்னே விரிந்து கிடக்கின்றது. அவ்வாறு மாறவில்லை என்றால், வழக்கமான ஒரு இறப்பாக, அதற்கான தண்டனையாகவே மாறிவிடும். ஆகவே இந்த விவாதத்தினை மூன்று மாணவர்களை மட்டுமே வைத்து இல்லாமல் இந்த சமூகத்தினையும்,ஒட்டு மொத்த மாணவர்களையும் உள்ளடக்கியதாக மாற்றிட வேண்டியுள்ளது.
கல்லூரிக்குள் மாணவர்களுக்கு இடையே நிகழ்ந்த சண்டையினை ஒட்டி இவர்கள் மூன்று பேரையும் கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றியும், அதன் பிறகு மாணவிகளை கேலி செய்ததாக கூறி சஸ்பெண்டும் செய்துள்ளனர்.அதனுடைய விளைவாகவே கல்லூரி முதல்வரைப் பழி வாங்கும் பொருட்டு மாணவர்கள் அவரை கொன்று விட்டார்கள் என்று தான் பெரும்பாலான ஊடகங்கள் கூறி வருகின்றன. இந்த நேரத்தில் தான் கல்லூரியின் இயக்குநர் எங்கள் கல்லூரியில் இது போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கென்று ஆலோசனை மையம் உள்ளது. அப்படி இருந்தும் இது போன்ற பிரச்சனைகள் நடப்பது அதிர்ச்சியளிக்கிறதுஎன்று கூறியுள்ளார்.
அப்படியானால் இயல்பாகவே நம்முன்னே எழும் கேள்வி என்னவென்றால், மாணவர்களுக்கு இடையே சிறிய சிறிய பிரச்சனைகள் நடப்பது இயற்கையான ஒன்றே, அந்த பிரச்சனைகளை சரி செய்யத்தான் இது போன்ற ஆலோசனை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.ஆனால் இங்கு அவர்களுக்கு ஆலோசனை வழங்காமல் விடுதியை விட்டு வெளியேற்றுவது என்பதுதான் அதனுடைய பலனா?பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் ஒழுக்கம் என்ற பெயரில் தங்களுக்குக் கீழ் அனைத்தையும் செய்திட வேண்டும் என்கிற அடிமைத்தனத்தையே மாணவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்.
அதனையே ஆலோசனை மையங்கள் என்ற பெயரிலும் செயல்படுத்திட முனைகிறார்கள். இன்றைக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் தற்கொலைகள் அதிர்ச்சியளிக்கக்கூடிய அளவில் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் அதிக மதிப்பெண் பெற்று +2 தேர்ச்சி பெற்ற தைரியலெட்சுமிகள் கூட தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு, அவர்களுக்கு உள்ளே கல்லூரி குறித்து, கல்வி குறித்த மன அழுத்தம் வெகுவாக அதிகரித்துள்ளது. பெரும்பான்மையான கல்லூரிகளில் மனநல ஆலோசனைகளை வழங்குவதற்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்களோ, அல்லது அதற்குரிய எந்த வித ஏற்பாடோ இல்லை. அப்படிப்பட்ட நிலையில் இப்படியான ஆலோசனை மையங்கள் இருந்தும் எந்தவித பலனும் இல்லை.
ஆனால் அனைத்து கல்லூரிகளின் நிறுவனர்களும் தங்களை மாணவர்களின் கல்விக்காக வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்களாக காட்டிக் கொள்கிறார்கள்.இன்றைக்கு உலகமய நவீன தாராளமய பொருளாதார சூழலில் கல்வி ஒரு விற்பனை பொருளாகவே மாற்றப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்த கல்விச் சந்தையும் மிகப்பெரிய அளவிற்கு பணம்என்ற ஒன்றை மட்டுமே சுற்றி வந்து கொண்டு இருக்கிறது. இங்கே கல்லூரிகளின் நிறுவனர்கள் முதலீடு செய்து தொழில் நடத்துபவர்களாகவும், மாணவர்கள் அவர்களின் வாடிக்கையாளர்களாகவும், ஆசிரியர்கள் விற்பனைப் பிரதிநிதிகளாகவுமே செயல்படுகின்ற நிலை உருவாகியுள்ளது.
எனவே இது இயல்பாகவே வாங்கப்படுகின்ற ஒரு பொருளாதாரம் குறைந்தால் அது வாங்கப்படும் விற்பனைப் பிரதிநிதியிடமே கோபமாக காட்டப்படும். அதனுடைய வெளிப்பாடாகவே கல்லூரி நிர்வாகங்கள், ஆளும் அரசுகள் மறுக்கின்ற ஒவ்வொரு ஜனநாயகச் செயல்பாடுகளும், அதன் பிரநிதிகளான ஆசிரியர்கள் வெளிப்படுவது தொடர் நிகழ்வாகியுள்ளது. இது கண்டிக்கத்தக்க அதே நேரத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் சரியான அரசு உத்தரவின்படி முறையாக இயங்குவதற்குத் தேவையான அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள், கட்டட வசதிகள் தேவையானதில் ஐந்தில் ஒரு பங்கு கூட இருக்காது.
ஆனாலும் இவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்ளாத பல கல்வித் தந்தைகள் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை,செயல்பாடுகளை துளிகூட மதிப்பதும் இல்லை.அனுமதிப்பதும் இல்லை.இந்த விஷயத்தில் நாம் மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது, இன்றைய முதலாளித்துவ சமூகத்தின் ஆசிரியர்- மாணவர் உறவு. ஆளுகின்ற அரசுகள், முதலாளித்துவ சார்புலன் அரசியலற்ற மாணவர் கூட்டத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல்,ஆசிரியர்களையும் அதிகார மையங்களாகவே மாற்றியுள்ளன,இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆசிரியர் மாணவர் உறவு,இன்றைக்கு எங்கே தொலைந்து போனது?என்ற பதில் இல்லாக் கேள்வியே நம் முன்னே எஞ்சுகிறது.இந்தியா முழுமைக்கும் தேடினாலும் கூட மாணவர்கள் கேள்வி கேட்க,ஆசிரியர்கள் பதில் சொல்லும் வகுப்பறைகள் வெகு சிலவே.
இப்படிப்பட்ட நிலையினை மாற்றி,வகுப்பறைகளை மாணவர்களுக்கு பிடித்தமான ஒரு இடமாக நாம் என்றைக்கு மாற்றப் போகிறோம்? என்ற கேள்வி நம் சமூகத்தின் முன்பு வீசப்பட்ட சவாலாகவே இருக்கிறது.இதையெல்லாம் தாண்டி இந்த முதலாளித்துவம் தற்பொழுது கண்டு பிடித்துள்ள மிக முக்கிய ஒழுக்க நெறி. வகுப்பறைக்குள்ளோ,கல்லூரி வளாகத்தின் உள்ளோ எத்த மாணவனோ,மாணவியோ பரஸ்பரம் பேசிக் கொள்ளக்கூடாதுஎன்பது.இந்த மிக மோசமான செயலை ஆராய முன் மாதிரி வகுப்பறைகள் என்ற பெயரில் நவீன கண்காணிப்பு கேமராக்களை உடைய வகுப்பறைகளை பல தனியார் பள்ளி ,கல்லூரிகள் உருவாக்கியுள்ளன.இப்படியாக ஆண்-பெண் இடையிலான ஒரு நட்புறவினை உருவாக்க எந்த செயலும் இருக்க கூடாது என்ற கொடிய நோய் பரவிக்கொண்டிருக்கிறது.இப்படிப்பட்ட தனி மனிதச் சுதந்திரப் பறிப்பும் நாகரிகம் என்ற பெயரில் நடக்கிறது.
இவையே ராகிங்,பாலியல் ரீதியான கேலிகள் உள்ளிட்டவைகளுக்கு அடிப்படையாக அமைகின்றன.ஒரு குற்றத்தினை செய்தவரை விட,அதைச் செய்யத் தூண்டியவருக்கு தண்டனை அதிகம் என்ற நியதியை இந்த இடத்திலே கோடிட்டு பேசிட வேண்டியுள்ளது.அது போல மாணவர்களின் ஜனநாயக உரிமைகளுக்கான கல்வி நிலைய செயல்பாடுகளும்,அதை பெற்றுத் தருகின்ற மாணவர் பேரவைத் தேர்தல்களும்,ஆண்-பெண் நட்புணர்வுக் குழுக்களும் இன்றைக்கு அவசியமான அடிப்படைத் தேவைகளாக உள்ளன.எனவே கல்லூரி முதல்வர் படுகொலை சம்பவத்தினை சமூகப்பார்வையோடு அணுகிட வேண்டிய தேவை உள்ளது.
-எஸ்.கார்த்திக் மாவட்டத் தலைவர் எஸ்எப்ஐ, மதுரை புறநகர்




No comments:

Post a Comment