அதற்குள்ளேயே
கூச்சல் ஏன்?
இந்தியாவில் பெருநிறுவனங்கள் ஆடும் சூதாட்டத்துக்கு
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு மேலும் ஓர் உதாரணம்.
ஒடிசாவின் சம்பல்பூரில் இரு நிலக்கரிச்
சுரங்கங்களைத் தன்னுடைய ‘ஹிண்டால்கோ’ நிறுவனத்துக்கு
ஒதுக்க வேண்டும் என்று கடந்த 2005-ல் பிரதமர் சிங்குக்கு இரு கடிதங்களை
எழுதினார் ‘ஆதித்ய
பிர்லா குழும’த்
தலைவர் குமார் மங்கலம் பிர்லா. இந்தச் சுரங்கங்கள் பொதுத்துறை நிறுவனங்களான மகாநதி
மற்றும் நெய்வேலி நிலக்கரி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படவிருந்தவை. பிர்லாவின்
கோரிக்கை தொடர்பாக, நிலக்கரித்
துறையிடம் பிரதமர் கேட்டபோது, இந்த விஷயத்தை பிரதமருக்கு நிலக்கரித்
துறை தெரிவித்துவிட்டது. தொடர்ந்து, ஒடிசா
முதல்வர் நவீன் பட்நாயக், ‘ஹிண்டால்கோ’வுக்கு
அந்தச் சுரங்கங்களை ஒதுக்கப் பரிந்துரைத்து பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
இதனிடையே நிலக்கரித் துறைச் செயலரை இரு முறை சந்தித்தார் பிர்லா. பிரதமர் மீண்டும்
இது தொடர்பாக நிலக்கரித் துறையிடம் விளக்கம் கேட்க, ‘ஹிண்டால்கோ’வுக்கும்
ஒதுக்கீடு கிடைத்தது. அதுவும் பொதுத்துறை நிறுவனங்களுடனான ‘ஹிண்டால்கோ’வின்
இந்தப் பகிர்வு, முறையான
அனுமதிகள் - ஒப்புதல்கள், அரசாணை
வெளியீடு ஏதுமில்லாமல், நிலக்கரித்
துறைச் செயலரின் கருத்துருவை அடிப்படையாகக் கொண்டு நடந்திருக்கிறது.
அப்பட்டமாக, பிர்லாவின்
லாபியை வெளிப்படுத்துகிறது இந்த ஒதுக்கீடு. ஆனால், இத்தனை
ஆண்டுகளாக எதுவுமே நடக்கவில்லை. உச்ச நீதிமன்றக் கெடுபிடியால், 1993 முதலான
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடுகளை விசாரிக்கும் சி.பி.ஐ., கடந்த
16-ம்
தேதி பிர்லா மீதும் அவருடைய ‘ஹிண்டால்கோ’நிறுவனம்
மீதும் வழக்குப் பதிந்தது. ஆரம்பித்துவிட்டது கூச்சல். "பிர்லாவின் நேர்மையை
எவரும் சந்தேகிக்க முடியாது" என்கிறார் அமைச்சர் ஆனந்த் ஷர்மா. "இது
தவறான சமிக்ஞை" என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி. "நாடு
பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவரும் காலகட்டத்தில், 40 நாடுகளில்
வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் முன்னணித் தொழிலதிபர் மீதான இந்நடவடிக்கை
முதலீட்டாளர்களின் உணர்வுகளை பாதிக்கும்" என்கிறது இந்தியத் தொழில்துறை.
"வர்த்தக நிறுவனத் தலைவர்களை பலிகடாவாக்கக் கூடாது" என்கிறது வர்த்தக
அமைப்பான ‘ஃபிக்கி’.
நாட்டின் பெருநிறுவனங்கள் ‘டாடா’, ‘ரிலையன்ஸ்’, ‘ஜிண்டால்’எனப்
பலவும் இன்று பெரும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றன. மூன்று நாட்களுக்கு
முன்புகூட 'பெருநிறுவனங்களும்
அரசு நிர்வாகிகளும் தீய நோக்கத்துடன் கூட்டுசேர்ந்து செயல்பட்டுள்ளனர் என்பதை
ராடியா உரையாடல்கள் காட்டுகின்றன' என்று குறிப்பிட்டுள்ளது உச்ச
நீதிமன்றம். "வழக்கில் பிரதமரையும் சேருங்கள்" என்கிறார் முன்னாள்
நிலக்கரித் துறைச் செயலர் பரேக். இனிதான் ஆட்டம் தொடங்க வேண்டும். அதற்குள்ளேயே
ஏன் கூச்சல்களும் அரற்றல்களும்?
No comments:
Post a Comment