Monday 16 September 2013

எண்ணமெல்லாம் எண்ணெய்!




எண்ணமெல்லாம் எண்ணெய்! - சிக்கல் 'புகழ்' சிரியா

பா. ராகவன்  ·  

சில வருடங்களுக்கு முன்... ஒரு விமானத் தாக்குதலின்போது...
சில வருடங்களுக்கு முன்... ஒரு விமானத் தாக்குதலின்போது...
கொசுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகளுக்கு எதிரான நம்பகமான ஆயுதமாக நாம் பயன்படுத்தும் ஸ்பிரே வகையறாக்களை மனத்துக்குள் நினைத்துக்கொள்ளுங்கள். மனிதர்களை இம்சிக்கும் பூச்சிகளைக் கொல்லப் பயன்படும் ரசாயனங்கள் நல்லது வகையறா. இம்சிக்கும் மனிதர்கள் என்று முடிவு செய்து, இன்னொரு தரப்பு மனிதர்கள் கொல்லப் பயன்படுத்தும் ரசாயனங்கள் கெட்டது வகையறா.
சண்டைக்கு வரியா, வரியா என்று அமெரிக்கா இன்று வரிந்து கட்டிக்கொண்டிருக்கும் சிரியாவின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு இதுதான். சொந்த மண்ணின் மக்களைக் கொல்ல அந்நாட்டு அரசு ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கிறது. ரஷ்யா மத்தியஸ்தம். சீனாவின் சகாயம். இருக்கவே இருக்கிறது இரானிய இணைப்பு ஃபெவிக்கால். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சுற்று வட்டாரக் கடல் பகுதிகளில் மீன்களை நகர்த்திவிட்டு மிதவைகளும் கப்பல்களும் நிரம்பியிருப்பது பிராந்தியத்தைப் பதற்றமாக்கிவிட்டது. அதென்ன உல்லாசக் கப்பலா! பொல்லாத போர்விமானம்தாங்கிக் கப்பல்கள்.
மத்தியக் கிழக்கில் எப்போது பதற்றமில்லை? இதே ரசாயன ஆயுத விவகாரம்தான் ஏழு வருஷங்களுக்கு முன்னால் இராக்கில் சதாம் உசேனுக்கு சமாதி கட்டியபோது அஸ்திவாரமாகப் போடப்பட்டது. ஜப்பான், லிபியா, அமெரிக்கா, ரஷ்யா, வட கொரியா - பல பேரிடம் இருக்கிறது. நம்மிடம்கூட. குறைந்தது ஆறு வித்தியாசங்கள் கொண்ட நல்ல, கெட்ட சக்திகளாக அறியப்படுவது அவற்றைப் பயன்படுத்தல் - பயன்படுத்தாமை சார்ந்த கல்யாண குணங்களைப் பொறுத்தது.
சிரியா தனது ரசாயன ஆயுத இருப்பு குறித்த தகவல்களை இரு கட்சிக்கும் பொதுவில் வைத்து நல்ல பிள்ளையாகக் கையைத் தூக்கிவிட்டால் யுத்தம் மூளாது என்பது பொதுவான நம்பிக்கை. விளாதிமிர் புதினுக்கு அமைதிக்கான நோபல் பரிசும் தங்கத் தமிழனுக்கு சகாயவிலையில் தக்காளிப் பழமும் நிச்சயமாகும். இல்லாவிட்டால் நாலு நாளுக்கொரு முறை இரண்டு ரூபாய் விலை ஏறிக்கொண்டிருக்கும் எரிபொருளாகப்பட்டது, நாலு மணி நேரத்துக்கொருமுறை மேலே போக ஆரம்பிக்கும். நமக்கு நடராஜா சர்வீஸ் சித்திக்கும்.
அது நிற்க. இப்போதைக்கு யுத்தம் தள்ளிப்போடப்பட்டாலும் சிரியாவின் மீதான கெட்ட கிரக சஞ்சாரங்கள் இப்போதைக்கு சரியாக இல்லை என்பது கண்கூடு. அதிபராகப்பட்டவர், முப்பதாண்டுகளுக்கு மேலாக நாற்காலியை விட்டு இறங்க மாட்டேனென்று அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டிருந்தவரின் சீமந்த புத்திரன் (பஷார் அல் அஸாத்). அப்பா சொத்தாகக் கிடைத்த நாற்காலியை இவரும் பதிமூன்று ஆண்டு காலமாக கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார். அது முப்பது இது பதிமூணு என்றால் ஆகமொத்தம் நாற்பத்தி மூன்றாண்டுகாலக் குடும்ப அரசியல். பத்தாது?
ஆகவே, அரசுக்கு எதிரான கலகக் குழுக்கள் அமெரிக்க ஆசீர்வாதத்துடன் மேலெழும்பத் தொடங்கின. மேற்படி ரசாயன ஆயுதங்களைப் பிரயோகித்து அப்பாவிகளைக் கொன்ற படுபாவிகளே அன்னார்தான் என்பது ஆளும் தரப்பின் குற்றச்சாட்டு.
இதெல்லாம் இருக்கிறதுதான். துனிஷியாவில் பார்க்காததா. லிபியாவில் பார்க்காததா. எகிப்தில் பார்க்காததா. அரசுக் கட்டில் பழசானால் தப்பில்லை. கட்டில்வாசி பழசாகும்போதுதான் பிரச்னையே. இஸ்ரேலுக்குப் பக்கத்தில் இருந்துகொண்டு இஸ்ரேல் எதிரி தேசமாக இத்தனை காலமாக சிரியா தாக்குப் பிடித்துக்கொண்டிருந்ததே பெரிய விஷயம். 2011லிருந்து சிவில் யுத்தம் என்ற பெயரில் எக்கச்சக்க கிரிமினல் நடவடிக்கைகள் அங்கே அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இருப்பது எண்ணெய், இல்லாதது நிம்மதி. மக்களாவது மண்ணாங்கட்டியாவது?
மத்தியக் கிழக்கில் என்ன காரணத்துக்காகவோ இன்னொரு யுத்தம் வருமானால் இப்போதைய சூழலில் உலகு அதைத் தாங்காது. விற்கிற விலைவாசியில் அமெரிக்காவேகூட அதை விரும்பாது. சும்மா கொஞ்சம் பூச்சாண்டி காட்டிவிட்டு ஒரு ஆட்சி மாற்றத்துக்கு அடிக்கோல் நாட்டப் பார்ப்பார்கள். அது நடந்தால் பத்தாதா.
இதையெல்லாம் எண்ணமா தீர்மானிக்கிறது? எண்ணெய்தான் தீர்மானிக்கிறது.

No comments:

Post a Comment