பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாப்போம்!
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டரை லட்சம் ஊழியர்களும்,அதிகாரிகளும் 2015 ஏப்ரல் 21 மற்றும் 22தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். அரசின் கொள்கையால் நஷ்டம்அடைந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தை புத்தாக்கம் செய்யவே இந்த வேலைநிறுத்தம்.இந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்துவது அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஆகும். இந்திய நாட்டின் மக்களிடம் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாப்போம் என்ற வலுவான கோஷத்தை கொண்டு செல்லும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
25 லட்சத்திற்கும் அதிகமான கையெழுத்தினை இந்திய நாட்டு மக்களிடம் பெற்று,பிப்ரவரி 25 ம் தேதி ஆயிரக்கணக்கான பிஎஸ்என்எல் ஊழியர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தி பிரதமர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 12-03-2015 அன்று வேலை நிறுத்தஅறிவிப்பு மோடி அரசிற்கு கொடுக்கப்பட் டுள்ளது. ஊழியர்களை திரட்டுவதற்காக அனைத்து மாநிலங்களிலும் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக பெருந்திரள் கருத்தரங்குகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தம் மிகுந்த எழுச்சியுடன் ந்டைபெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
தனியாரோடு போட்டியிட முடியாதா ?
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சொத்துமதிப்பு 89,333.44 கோடி ரூபாய். அது இந்தியாவின் பத்தாவது மிகப்பெரிய நிறுவனமாகும். அதே சமயம் அதுதான் இந்தியாவின் மிகப்பெரிய நஷ்டம் அடையும் பொதுத்துறை நிறுவனமாகும். அது 2009-10ஆம் ஆண்டுகளில் இருந்து தொடர்ந்து நஷ்டத்தை அடைந்து வருகிறது. பிஎஸ்என்எல் சேவைகளின் தரம் பரந்துபட்ட விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. தனியார் நிறுவனங்களுடனான போட்டியில் பிஎஸ்என்எல் தோற்றுவிட்டது என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் மீடியாக்கள், அதனை காலதாமதமின்றி தனியார்மயப்படுத்திவிட வேண்டும் என பிரச்சாரம் செய்கிறது.
ஆனால் உண்மை மாறுபட்டது. மொபைல் சேவைகளை வழங்க தனியாருக்கு 1995ஆம் வருடமே உரிமங்கள் கொடுக்கப்பட்டது. ஏழு ஆண்டுகள் கழிந்த பின்னரே, அதாவது 2002ஆம் ஆண்டுதான் மொபைல் சேவைகளை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனத் திற்கு உரிமம் கொடுக்கப்பட்டது. அரசாங்கத்தால் லாவகமாக திட்டமிடப்பட்டு இவ்வாறு தனியாருக்கு முன்னரே அனுமதி வழங்கப்பட்ட போதிலும், மொபைல் சேவையில் வெகுவான முன்னேற்றம் அடைய பிஎஸ்என்எல் நிறுவனம் அதிககாலம் எடுக்கவில்லை.
2003ஆம் ஆண்டிலேயே அனைத்து ஒட்டுமொத்த தனியார் நிறுவனங்களை காட்டிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் அதிக இணைப்புகளை கொடுத்தது. தனியார் நிறுவனங்களின் கடுமையான போட்டி இருந்த போதும் 2004-05ஆம்ஆண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் 10,183 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியது. அது 2009ஆம் ஆண்டு வரை லாபத்தை ஈட்டி வந்தது. எனவே தனியார் நிறுவனங்களோடு பிஎஸ்என்எல் நிறுவனம் போட்டி போட முடியாது என்பது தவறானது.
கூட்டுச்சதியேநஷ்டத்திற்கு காரணம்
தனியார் நிறுவனங்கள், அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோரின் ஆழமான கூட்டுச்சதிதான், போட்டியில் பிஎஸ்என்எல் பின்தங்கியதற்கும், நஷ்டம் அடைவதற்கும் காரணம் என்பதில் எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமில்லை. இந்த சதியின் காரணமாக கிட்டத்தட்ட ஆறு, ஏழு ஆண்டுகள் தனது மொபைல் சேவையை விரிவுபடுத்த பிஎஸ்என்எல் நிறுவனம் அனுமதிக்கப்படவில்லை. 2007ஆம் ஆண்டில் 45 மில்லியன் மொபைல் கருவிகள் வாங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் டெண்டர், அப்போதைய தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவால் ரத்து செய்யப்பட்டது. தனியார் நிறுவனங்கள் ஆதாயம் அடைவதற்காக,
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செல்சேவை விரிவாக்கம் தடுத்து நிறுத்தப் படவேண்டும் என்பதற்காகவே இது செய்யப்பட்டது. இந்த டெண்டர் ரத்து செய்யப்படக்கூடாது என்பதற்காக ஜூலை, 2007ல் ஒட்டுமொத்த பிஎஸ்என்எல் ஊழியர்களும், அதிகாரிகளும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக 22.5 மில்லியன் இணைப்புக்களுக்கான கருவிகள் வாங்கும் டெண்டர் கோரப்பட்டது. எனினும் பிஎஸ்என்எல் இணைப்புக் களுக்காக மக்களிடம் தேவை அதிகரித்துக் கொண்டே வந்தது.
எனவே மீண்டும் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரமாண்டமான 93 மில்லியன் டெண்டர் விடப்பட்டு 2010 ஆம் ஆண்டு ஒரு சீனநாட்டு நிறுவனத்திடம் இருந்துகருவிகள் வாங்க முற்பட்ட போது,உள்துறை அமைச்சகம் ஆட்சேபணைகளை எழுப்பியது. அரசின் நிறுவனமாக பிஎஸ்என்எல் இருப்பதால், சீனநாட்டு நிறுவனத்திடம் இருந்து கருவிகள் வாங்கினால் அது தேசப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்ற காரணத்தை சொல்லி அந்த நிறுவனத்திடம் இருந்துகருவிகள் வாங்கக்கூடாது என்பதே உள்துறை அமைச்சகத்தின் ஆட்சேபனை. இறுதியில் இந்த டெண்டரும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் சீன நிறுவனங்களிடம் இருந்து கருவிகள் வாங்கும் போது, பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் அவர்களிடம் இருந்து வாங்கக்கூடாது என தடை விதித்தது உள்துறை அமைச்சகத்தின் உள்நோக்கம் கொண்ட செயலாகும்.இது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சியை தடை செய்ய வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்திற்காக செய்யப்பட்டது. பெரு நிறுவனங்கள் பல்வேறு அமைச்சகங்களில் எந்த அளவிற்கு தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது என்பது நீராராடியாவின் ஒலிநாடாக்களின் மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் கருவிகள் வாங்குவதற்கு ஏற்படுத்தப்பட்ட இத்தகைய திட்டமிட்டு தடைகள் காரணமாக இந்த நிறுவனத்தை சரியான நேரத்தில் விரிவு படுத்திக் கொள்ள இயலவில்லை. அதுதான் வலைத்தள சேவை நெருக்கடிக்கும் சேவையின் தரம் குறைவதற்குமான காரணம்.
தொலைத் தொடர்பு அமைச்சரின்ஒப்புதல்வாக்குமூலம்
28.02.2015 அன்று சிஎன்பிசி-டிவி18ற்கு தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலத்தில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார். “இந்த இரண்டு நிறுவனங்களும் (பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்) 2005-06 ஆம் ஆண்டுகள் வரை ஆயிரம்ஆயிரம் கோடி ரூபாய்களை லாபமாக ஈட்டியது. அதனை தொடர்ந்த ஆண்டுகளில் இவ்வாறு சிக்கலான நிலைக்கு அவை வருவதற்கு என்ன காரணம் ? நான் ஒரு சிலவற்றை உங்களுக்கு ஒளிவு மறைவு இன்றி சொல்வதென்றால், அவைகள் தங்களை விரிவு படுத்திக்கொள்ள அனு மதிக்கப்படாமல் இருக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன”.
ரவிசங்கர்பிரசாத் அமைச்சராக பதவி ஏற்ற நாள் முதல் இந்தக்கருத்தையே தெரிவித்துவருகிறார். அமைச்சர் சொல்வது நூறு சதவிகிதம் சரிதான். ஆனால் அவர் பொறுப்பேற்று பத்து மாதங்கள் ஆகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் சந்தித்த இந்த அநீதி களையப்படுவதற்கு அவர் சிறு துரும்பை யும் அசைக்கவில்லை. எனவே தாமதிக்கப்பட்ட விரிவாக்கத்திற்கு தேவையான கருவிகளை வாங்குவதற்கு தேவையான நிதியை பிஎஸ்என்எல் நிறுவனம் பெறுவதற்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்பதே ஒருங்கிணைப்புக்குழுவின் பிரதான கோரிக்கை.
அரசே ஈடுகட்ட வேண்டும்
கிராமப்புற தரைவழி சேவைகள் கொடுப்பதால் ஏற்படும் நஷ்டம் என்பதே பிஎஸ்என்எல் நிறுவனம் நலிவடைய மற்றொரு முக்கிய காரணமாகும்.2013-14ஆம்ஆண்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 7,600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.ஆனால் கிராமப்புற தரைவழி சேவைகளை வழங்குவதால் அந்த நிறுவனத்திற்கு ஆண்டொன்றிற்கு 10,000 கோடி ரூபாய்க ளுக்கு மேல்நஷ்டம் ஏற்படுகிறது.இந்த இணைப்புகள் அனைத்தும் இத்தனை ஆண்டுகளாக அரசாங்கம் நிர்ணயித்த இலக்குகள். பிஎஸ்என்எல் நிறுவனம் ஒன்று மட்டும் தான் நாடு முழுவதும் கிராமப்புற தரைவழிசேவைகளை வழங்கி வரும் நிறுவனம் என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. “சமூகத்திற்கு அவசியமான, ஆனால் வியாபார ரீதியாக பலனில்லாத” சேவைகளை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குவதால் ஏற்படும் நஷ்டம் ஈடு கட்டப்படும் என பிஎஸ்என்எல் நிறுவனமாக உருவாகும்போது , அரசாங்கம் உறுதிமொழி அளித்தது. ஆனால் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்த போதும், இந்த உறுதிமொழி எப்போதும் நிறைவேற்றப்படவில்லை.அதிகாரத்திற்கு வந்த தொடர்ச்சியான அரசங்கங்கள் அனைத்தும், தனியார் நிறுவனங்களை பலப்படுத்த தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். 1999ஆம் ஆண்டு வாஜ்பாய் செய்தது மிகச்சிறந்த உதாரணம்.1995 ஆம் ஆண்டு உரிமங்கள் பெற்ற பின்னர் தனியார் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமக்கட் டணங்களை செலுத்தத் தவறின. இது ஆயிரக்கணக்கான கோடிரூபாய்கள் அளவிற்கு சென்றது. இதிலிருந்து தனியார் நிறுவனங்களை காப்பாற்ற வாஜ்பாய் அரசாங்கம் உரிமக்கட்டண முறையிலிருந்து வருவாயில் பங்கீடு என்ற முறைக்கு மாற்றியது.
இத்துடன் தனியார் நிறுவனங்கள் கட்ட வேண்டிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களையும் தள்ளுபடி செய்தது. இப்படி தனியார் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய உபகாரம் செய்ய முடியும்போது, பிஎஸ்என்எல் நிறுவனம் உருவாக்கும்போது அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவது என்ற கடமையும் அதற்கு உள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் கொடுத்து வரும் கிராமப்புற தரைவழி சேவைகளால் ஏற்படும் நஷ்டத்தை அரசாங்கம் ஈடுகட்ட வேண்டும் என்பது இந்த வேலைநிறுத்தத்தின் இரண்டாவது முக்கியகோரிக்கையாகும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புத்தாக் கம் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக ஒருங்கிணைப்புக்குழு வற்புறுத்தி வந்துள்ளது. பிஎஸ்என்எல் புத்தாக்கம் தொடர்பாக எந்த ஒரு அக்கறையும் அரசாங்கம் எடுக்காதது மட்டுமல்ல.இந்த நிறுவனத்தை நிர்மூலமாக்கும் சில நடவடிக்கைகளையும் மேற்கொள்ள துவங்கியுள்ளது. தில்லி மற்றும் மும்பையில் மட்டும் தொலைபேசி சேவைகளை கொடுத்துவருகிறது எம்டிஎன்எல் என்ற பொதுத்துறை நிறுவனம் ஆகும். கடந்த பல ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து , 46.5 சதமான பங்குவிற்பனை செய்யப்பட்டு, 12,000 கோடி கடனோடு இருக்கின்றஎம்டிஎன்எல் நிறுவனத்தை பிஎஸ்என்எல்உடன் இணைப்பது என்ற முன்மொழிவுபிஎஸ்என்எல் நிறுவனத்தை புதைகுழியில் தள்ளும். மேலும் பிஎஸ்என்எல் லிலிருந்து அதன் டவர்களை பிரித்து,ஒரு துணை டவர் நிறுவனம் உருவாக்க (பிபிஎன்எல்) அரசு முடிவெடுத்து இருப்பது பிஎஸ்என்எல் நிறுவனத்தை மேலும்பலவீனப்படுத்தி உள்ளது. நஷ்டத்தில் இருக்கும் எம்டிஎன்எல் நிறுவனத்தை பிஎஸ்என்எல் உடன் இணைப்பதும்,
வருமானத்தை கொடுக்கும் டவரை பிரிப்பதும் ஆட்சியாளர்களின் நயவஞ்சக சூழ்ச்சி ஆகும்.பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் பல பதவிகள் வருடக் கணக்கில் நிரப்பப்படவில்லை. இவைகளை நிரப்பாமல் அரசாங்கம் வேண்டுமென்றே அமைதிகாக்கின்றது. அரைகுறை இயக்குனர் குழுவோடு எவ்வாறு ஒரு நிறுவனம் செயல்பட முடியும்? தனது 20 அம்ச கோரிக்கைகளில் இது போன்ற பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புத்தாக்கத்திற்கு அத்தியாவசியமான கோரிக்கை களை போராட்டம் முன் வைத்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த கால பெருமைகளை மீண்டும் அடைவதற்கு அதன் ஊழியர்களும், அதிகாரிகளும் உறுதி பூண்டுள்ளனர்.ஏப்ரல் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு பின்னும் அவசிய மேற்பட்டது என்றால் மேலும் தீவிரமான போராட்டங்கள் தொடரும்.‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’யில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.கட்டுரையாளர் : பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்.
No comments:
Post a Comment