Saturday, 8 March 2014

சர்வதேச பெண்கள் தினம்! வாழ்த்து!!

சர்வதேச பெண்கள் தினம்!  வாழ்த்து!!
 
மார்ச் - 8 ம், நமது கடமைகளும்...
மாலதி சிட்டிபாபு

தொழிற்சங்க நிகழ்ச்சிகளுக்காக அடிக்கடி ரயிலில் பயணிப்பது வழக்கம். அதே போல் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நாள் இரவு ரயிலில் பயணம் செய்த பொழுது இரவு சுமார் 10.00 மணியளவில் என்னுடன் ரயில்-பெட்டியில் பயணம் செய்த ஒருவர் தன் மகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு “வேலை முடிந்து வீட்டிற்கு வந்துவிட்டாயா” என்று கேட்டார். எதிர் முனைப்பி லிருந்து “இன்னும் வேலை முடியவில்லை ஒரு அரை மணி நேரம் ஆகும்” என்ற பதில். அப்பா : “நீ வீட்டிற்கு வந்தவுடன் எனக்கு போன் பண்ணிவிடு அம்மா”; “சரி அப்பா”. அது போல் அவர் தன் மனைவிக்கும் போன் செய்து “இன்னும் மகள் வரவில்லை, போன் பண்ண சொல்லியிருக்கிறேன்” என்றார்.
எனக்கு தூக்கம் வந்தது. என்ன இது இன்னும் போனில் பேசிக் கொண்டு இருக் கிறார்கள் என்று நினைத்தேன். திரும்பவும் அவருக்கு போன் வந்தது. “வேலை முடிந்து தங்குமிடத்துக்கு வந்துவிட்டேன்” “சரியம்மா! தூங்கு” என்று கூறி அவர் தூங்கி விட்டார். ஒரு தந்தையின் கவலையை எத்தனை எதார்த்தமானது; அடுத்த நாள் பத்திரிக் கையில் ‘சென்னை சிறுசேரியில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த உமா மகேஸ்வரி என்ற இஞ்ஜினீயர் அலுவலகம் முடிந்து தங்குமிடத்திற்கு வராமல் ஒரு ஆறேழு நாட்கள் கழித்து அவருடைய உடலை முட் புதர்களுக்கிடையே அழுகிய நிலையில் கண் டெடுத்தார்கள்’ என்ற துயரமான செய்தியை படித்தவுடன் புரிந்தது.அண்மைக் காலங்களில் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தை பிப்ரவரி மாதம் முதலே மீடியாக்களும் வியாபார நிறு வனங்களும் பிரசங்கம் செய்ய துவங்கி விடுகின்றனர். ஆனால் எதார்த்த நிலை என்ன?பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாகி விட்டது. வெளியில் செல்லும் பெண் குழந்தைகள் பாதுகாப்பாக திரும்ப வேண்டும் என்று கவலையில் இன்று பெற்றோர்கள் தத் தளித்துக் கொண்டிருக்கின்றனர்.
வீட்டில் தனியாக இருக்கும் வயதான மூதாட்டிகளை குறிவைத்து கொள்ளையடிப்பதும் கொலை செய்வ தும் தொடர் சம்பவங்களாக ஏன் அன்றாட நிகழ்ச்சிகளாக நடைபெற்று வருகிறது. இந்த சமூக அவலத்திற்கு யார் பொறுப்பு! காவல் துறை, அரசு, வேலை வாங்கும் நிர்வாகம் என்று அனைவருக்கும் பொறுப்பு!நவீன தாராளமய உலகமய கொள்கை களும், பெண்களை ஒரு பொருளாக வியாபார ரீதியாக கையாளப்படுவதன் பலனாகவும் பெண்களுக்கெதிரான வன்முறை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இது பொதுவான நிலைமை.ஆனால் உழைக்கும் பெண்கள் இதோடு சேர்ந்து பணியிடங்களிலும், பயணத்தின் போதும் இதர இடங்களிலும் பாலியல் கொடுமைகளை சந்திக்கிறார்கள். பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் மிக தாமதமாக நிறைவேற்றப் பட்டிருப்பதுடன் பல குறைபாடுகளுடன் நிறை வேற்றப்பட்டுள்ளது. இந்த துன்புறுத்தல்களை, குறிப்பாக பணியிடங்களில், எதிர்த்து கட்டுப்படுத்த வேண்டுமென்றால் தொழிற் சங்க தலைமையும் தொழிலாளர்களும் ஒருங்கிணைந்து கூட்டாக தலையிட வேண்டிய அவசியத்தை உணர்ந்து அணுக வேண்டும். இதில் அதிக முன்னேற்றம் காண வேண் டியுள்ளது.எனவே இவ்வாண்டு சிஐடியு முன்வைக்கும் முக்கிய கோரிக்கை வன்முறை யிலிருந்து பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பெண்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
1911ல் சர்வதேச உழைக்கும் பெண்கள்தினத்தில் எழுப்பப்பட்ட அதே கோரிக்கை களைத் தான் நூறாண்டுகளுக்கு மேலான போராட்டங்களுக்கு பின்பும் இன்றும் நாம் எழுப்ப வேண்டிய நிலையில் உள்ளோம்.முதலாளித்துவ சுரண்டலுக்கு ஆளாக்கப் படுபவர்களில் அதிகமானவர்கள் பெண் தொழிலாளர்களே; பெண்கள் தரக்குறைவாக நடத்தப்படுகிறார்கள்; கல்வியில், வேலை வாய்ப்பில், பணி உயர்வில், கண்ணியமாக நடத்தப்படும் விதத்தில்; கூட்டுப்பேர நடவடிக்கைகளில் என்று எதிலும் அவர்கள் சமமாக நடத்தப்படுவதில்லை. பெண் தொழிலாளர்களின் பிரச்சனைகளின்பால் நிலையான கொள்கைகளை உருவாக்கவும், பாலின சமத்துவத்திற்கான இயக்கங்களை நடத்தவும், பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவும் பெண் உழைப்பாளிகளை சங்கப் பணிகளில் இணைத்துக் கொள்ள வேண்டியது சர்வதேச அளவில் இன்றைய காலத்தின் அவசியம்.
எனவேதான் அமெரிக்காவில் சர்வதேச அளவிலான பெண் தொழிலாளர்களுக்கான பிரச்சனைகள் குறித்து ஆய்வுக் கருத்தரங்கம் 2014 பிப்ரவரி 9 முதல் 19ந் தேதிவரை நடை பெற்றுள்ளது. இந்த ஆண்டு சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தை முன்னிட்டு சிஐடியு முன்வைத்த முக்கியமான மற்றொரு கோரிக்கை அனைத்து அம்சங்களிலும் பெண்களுக்கு சமத்துவம் கிடைக்கப்பட வேண்டும்.
மகளிர் இடஒதுக்கீடு
பெரும் ஆரவாரத்துடன் மாநிலங்கள வையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா ‘ஒருமித்த கருத்து இல்லை’ என்று காரணம் கூறிமக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவே இல்லை. மக்களவையில், அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்துஎன்பது ஒருபோதும் எட்ட முடியாதஒன்று. ஒருமித்த கருத்து இல்லாவிட் டாலும் ஆந்திராவை பிரிப்பது உள்ளிட்ட பல மசோதாக்கள் கூச்சல் குழப்பங் களுக்கிடையில் நிறைவேற்ற துணியும் கட்சிகளுக்கு நாடாளுமன்ற சட்டமன்றங் களில் பெண்களுக்கு இடம் கொடுக்க மட்டும் துணிவில்லை. நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் பொறுப்பற்ற தன்மையை இது அம்பலப்படுத்துகிறது. உண்மையில் இடதுசாரிகளும், ஒரு சில பிராந்திய கட்சிகளும்தான் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட வேண்டும் என்று நிற்கின் றனவே தவிர பல கட்சிகள் உதட்டளவே இச்சட்டத்தை வரவேற்கின்றன.
மகளிர் இட ஒதுக்கீடு பிரச்சனை மீது சிஐடியு மீண்டும் கவனம் செலுத்துகிறது. இவ்வாண்டு சர்தேச பெண்கள் தினத்தை அனுசரிக்கும் பொருட்டு நடத்தப்படும் பிரச்சாரங்களில் மேற்கூறிய முக்கிய பிரச்சனை களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அனைத்து சங்கங்களுக்கும் சிஐடியு அழைப்பு விடுத்துள்ளது.மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை! ‘பெண்கள் அனைத்து அம்சங்களிலும் சமமாக நடத்தப்பட, பெண்களுக்கெதிரான வன்முறை கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழித்திட நாடாளுமன்ற சட்டமன்றங்களில் பெண்களுக்கு உரிய இடம் பெற்றிட இவ்வாண்டு சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தில் அணிதிரள்வோம் வாரீர்.
சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம்
சமுதாயத்தின் சரிபாதியான பெண்கள் ஓட்டுரிமை, வேலைவாய்ப்புரிமைக்கான போராட்டத்தை 18ம் நூற்றாண்டில் தொடங்கி 1910ல் நியூயார்க்கில் பஞ்சாலை தொழிலாளியின் போராட்டமாகப் பரிணமித்தது. எட்டு மணிநேர வேலை,எட்டு மணிநேர ஓய்வு, எட்டு மணிநேர உறக்கம் என்று இன்று நாம் அரசு அலு வலகங்களிலும், தொழிற்சாலைகளிலும் மற்றும் பலதரப்பட்ட பணியிடங்களிலும் உரிமைக்குரல் எழுப்புகிறோமே அந்தக் குரலுக்கு ஆணிவேராய் அஸ்திவார மாய் 1857 மார்ச் 8 அன்று அமெரிக்க ஜவுளிமில்லில் உழைக்கும் பெண்கள் முதன் முதலில் வேலையை நிறுத்திதெருவில் இறங்கினார்கள். கடுங்குளி ரையும் பொருட்படுத்தாமல் நடைபெற்ற இப்போராட்டம் 15 வாரங்கள் நீடித்தது. இப்போராட்டம் உலகத்தையே உலுக்கக்கூடிய ஒரு பேரெழுச்சியாக மாறியது.

பின்னர் 1870ல் அமெரிக்க நாடாளு மன்றத்தில் பெண்களுக்காக உரிமைக் குரல் கொடுத்து தேசிய அளவில் பெண் கள் தினத்தை அனுசரிக்க வேண்டும் என சோஷலிஸ்ட் கட்சி வேண்டுகோளை வைத்தது. சோசலிஸ்ட் கட்சியின் வேண்டு கோளை ஏற்று அமெரிக்க அரசு பிப்ர வரி மாதம் 28ம் தேதி அனுசரிக்க அனுமதித்தது. பின்னர் 1910ல் சர்வதேச சோசலிஸ்ட் பெண்களின் 2வது மாநாடு நடைபெற்றது. 100 நாடுகளிலிருந்து பிரதிநிதி களாக வந்து கோபன்ஹேகன் நகரில் கூடிய இந்த சோசலிச பெண்கள் மாநாட் டில் “உழைக்கும் பெண்கள் சர்வதேச தினம்” அனுசரிக்க வேண்டுமென கிளாரா ஜேட்கின் முன் மொழிந்தார். சோசலிச பெண்கள் மாநாட்டின் வேண்டு கோளை பல நாடுகள் ஏற்றுக் கொண்டன. இதன் பிறகு 1911ல் மீண்டும் பெண்கள் மாநாடு கூடி விவாதித்து மார்ச் மாதம் 19ம்தேதி அனுசரிக்கப்பட்ட மகளிர் தினம், மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள் ஒன்றுகூடி அதை மார்ச் 8ம் தேதியாக மாற்றி ஐக்கிய நாடுகள் சபையின் அதி காரப்பூர்வ அறிவிப்பையும் பெற்றனர். இவ்வாறாக ஆண்டுதோறும் மார்ச் 8 சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment