அம்பானியின்
கஜானாவும் விவசாயிகளின் கல்லறையும்
இந்தியாவில் எல்லா
துறைகளும் தனியாருக்குத் திறந்து விடப்பட்டால் நுகர்வோருக்கே ஆதாயம் என நவீன
தாராளவாத கொள்கைகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் இத்தகைய
நடவடிக்கைகள் தனியாரின் லாப நோக்கத்திற்கு தீனி போடுவதாக இருக்குமேயன்றி
நுகர்வோருக்கு எவ்வித பலனையும் அளிக்காது என்பது மீண்டும்
நிரூபிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணா-கோதாவரி படுகையில் முகேஷ்அம்பானிக்கு சொந்தமான
ரிலையன்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்திடும் இயற்கை எரிவாயுவைப் பெறுவதற்கான விலையை
அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்த விலையின் அடிப்படையில் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டு
நடப்பிலுள்ள ஐந்தாண்டு ஒப்பந்தம் வருகின்ற மார்ச் 31ல் முடிவடைகிறது. இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனமானது, புதிய ஒப்பந்தத்திற்கான முன்மொழிவில் இயற்கை எரிவாயுவின் விலையை அதிரடியாக
உயர்த்தியுள்ளது.
இந்த விலை
அனுமதிக்கப்பட்டால் இயற்கை எரிவாயுவின் விலை, ஏற்கனவே அரசின் அனுமதியுடன் புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையான
எம்எம்பிடியு ஒன்றுக்கு8.3
டாலர் என்பதனை விட
10 சதவீதம் கூடுதலாக இருக்கும். இத்தகைய அதிரடியான
விலையேற்றம் ஏன் என்ற கேள்விக்கு விடை தேடும்பொழுது உண்மை அம்பலமாகிறது. ஏற்கனவே
போடப்பட்ட ஒப்பந்தத்தில் எரிவாயுவின் நிகர கலோரி மதிப்பின் மீது அரசு நிர்ணயம்
செய்த விலையில் கணக்கிடப்பட்டு வந்தது. ஆனால், புதிதாகக் கையெழுத்திடப்படவேண்டிய ஒப்பந்தத்தில் மொத்த கலோரி மதிப்பின் மீதான
கணக்கீடாக இது தன்னிச்சையாக ரிலையன்ஸ் நிறுவனத்தால் மாற்றப்பட்டுள்ளது. ரிலையன்சின்
இத்தகைய அதிரடி அறிவிப்பு மத்திய உர அமைச்சகத்தில் மிகுந்த கவலையை
ஏற்படுத்தியுள்ளது. இந்திய உர குழுமம் தனது கவலைகளை தெரிவித்து உர அமைச்சகத்திற்கு
கடிதம் எழுதியுள்ளது. யூரியா உரத்தின் உற்பத்தி விலையில் கிட்டத்தட்ட 80 சதவீதம் எரிவாயுவின் விலையாகும். இந்நிலையில்
ஒரு எம்எம்பிடியு எரிவாயுவின் விலை ஒரு டாலர் அதிகரிக்கும்போது யூரியாவின்
உற்பத்தி விலை ஒரு டன்னுக்கு ரூ.1,369 அதிகரித்திடும்.
அப்படியானால், எரிவாயுவை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் 18 மில்லியன் டன் யூரியாவிற்கான உற்பத்திச் செலவு
ரூ.2,465.1
கோடி அதிகரித்திடும்
என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இதே எரிவாயு வணிகத்தில் பொதுத்துறை
நிறுவனங்களான ஓஎன்ஜிசி நிறுவனமும், ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனமும் ஈடுபட்டு வருகின்றன. எரிவாயுவின் நிகர
கலோரிமதிப்பின் மீதே இவை கட்டணத்தை நிர்ணயம்செய்கின்றன. இவை இரண்டும் பொதுத்துறை
நிறுவனங்களாக இருப்பதால் இது தொடர்பானஅரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுகின்றன. ஆக, லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் சுயநலமே இந்த விலையேற்றத்திற்கு காரணமாகும். இந்த
விலையேற்றத்தால் அம்பானியின் கஜானா நிறையும். ஆனால், ஏற்கனவே விதைக்கும், இடுபொருட்களுக்கும் செலவு செய்த தொகை கூட
விளைவித்த பொருளுக்கு விலையாகக் கிடைக்காமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு
வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் கழுத்துச் சுருக்கை மேலும் இறுக்குவதாகவே
ரிலையன்சின் இந்த விலையேற்றம் இருக்கும்.
No comments:
Post a Comment