Thursday, 30 May 2013

கைவிடும் மத்திய அரசு  கைகொடுக்கும் மாநில அரசு
உணவு - குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உயிர்வாழ்வதற்கான ஒரு அடிப்படை உரிமை. அந்த உரிமையைப் பாதுகாப்பதும், உணவை உறுதிப் படுத்துவதும் அரசின் தலையாயக் கடமை. மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால்வாசிப் பேர் பட்டினியோடுதான் வாழ்கிறார்கள் என்ற நிலைமை உள்ள இந்தியாவில் உணவுப் பாது காப்பு என்பது மிக முக்கியமான பணியாகிறது. சீரான பொதுவிநியோகம் உள்ளிட்ட தொலை நோக்குள்ள திட்டங்கள் விரிவாகவும் வலு வாகவும் செயல்படுத்தப்பட வேண்டியது கட்டாயத் தேவையாகிறது. ஆனால் மத்திய அரசு படிப்படியாகப் பொதுவிநியோக முறையையே ஒழித்துக்கட்டும் திசையில் பயணித்துக் கொண் டிருக்கிறபோது, உச்சநீதிமன்றமே சொன்னாலும் கூட உணவுக்கழகக் கிட்டங்கிகளில் புழுத்து வீணாகிக்கொண்டிருக்கும் பல லட்சம் டன் தானியங்களை ஏழைகளுக்கு விலையின்றி வழங்கப்போவதில்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறபோது, மாநில அரசுகளின் பொறுப்பும் சுமையும் அதிகரிப்பது இயல்பு.

தமிழக அரசு தற்போது பொறுப்புடன் அந்தச் சுமையை ஏற்றிருப்பது வரவேற்கப்பட வேண் டியதேயாகும். அவ்வகையில் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படுவது மிக முக்கியமானதொரு பாதுகாப்பு நடவடிக்கை. சட்டமன்றத்தில் செவ்வாயன்று முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளின்படி, பொதுவிநியோக முறை மட்டுமல்லாமல், கூட் டுறவு அங்காடிகள் மூலம் கிலோ 20 ரூபாய் விலையில் சன்னரக அரிசி வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளது. நியாய விலைக் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்கப்படுவது 2014 மார்ச் வரையில் தொடரும் என்பதும் சட்டமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிச்சந்தையில் இந்த உணவுப் பொருள் களின் விலை நடுத்தர வர்க்க மக்களால் கூட தாங்க முடியாத அளவுக்குச் சென்றிருக்கிறது. பதுக்கலும் கொள்ளை லாபமுமே மத்திய ஆட்சி யாளர்கள் திணித்த திறந்த சந்தைப் பொருளாதா ரத்தின் அன்றாட விதியாகியிருக்கிறது. இந் நிலையில் இயலாமையின் விளிம்புக்கே தள்ளப் பட்டுள்ள ஏழைகளின் வாழ்க்கையை எண் ணிப்பார்க்கிறவர்கள், தமிழக அரசின் இந்த நட வடிக்கைகள், நிச்சயமாக விலைவாசி உயர்வின் ஈவிரக்கமற்ற தாக்குதலிலிருந்து அவர்களைப் பெருமளவுக்குப் பாதுகாக்கும் என்பதை ஏற்றுக்கொள்வார்கள். அரசியல் மாறுபாடு களுக்கு அப்பாற்பட்டு ஆதரிக்க வேண்டிய இந்த நடவடிக்கைகள், திறந்த சந்தையில் விலைகள் உயர்வதையும் பெருமளவுக்குக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

சென்னையில் ஏழைகளின் வரவேற்பைப் பெற்றுள்ள மலிவு விலை உணவகங்களும் இதில் பங்களிக்கக்கூடியவை. இந்த உணவகங் கள் மற்ற மாநகர்களிலும் திறக்கப்படும் என்ற அறிவிப்பு மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்பட்டாக வேண்டும். அதற்கான கட்டமைப்புகளை வலுப்படுத்தி யாக வேண்டும். கூட்டுறவு அமைப்புகளை ஆளுங்கட்சியினரின் தனி ராஜ்ஜியங்களாக மாற்ற நடக்கும் முயற்சிகள், இந்த அமைப்புகள் எந்த அளவுக்கு முறையாகச் செயல்படும் என்ற கவலையை அளிக்கின்றன. சரியான திட்டங் களை அறிவித்துள்ள அரசு, அவை சீராகச் செயல்பட, கூட்டுறவு அமைப்புகள் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு இயங்குவதையும் உறுதிப்படுத்துமானால் அது பல மடங்கு பாராட்டைப் பெறும்.

No comments:

Post a Comment