Monday 6 April 2020

ஒப்பந்த ஊழியர்களின் குடும்பங்களை பட்டினியில் இருந்து பாதுகாப்போம்



நாடு முழுவதும் BSNLல் உள்ள 40,000 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, கடந்த பத்து மாதங்களில் இருந்து 14 மாதங்கள் வரை ஊதியம் தராத அவல நிலை தொடர்கிறது.  நிறுவனத்தின் நிதி நிலையினை காரணம் காட்டி கார்ப்பரேட் அலுவலகம் அவர்களுக்கான நிதியினை ஒதுக்க அக்கறை எடுப்பதில்லை.
இந்த பிரச்சனை பாராளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது.  ஆனால், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் தர வேண்டிய பொறுப்பு ஒப்பந்தக்காரர்களுக்கு தான் உள்ளது என்றும், BSNL நிர்வாகத்தின் பொறுப்பு இல்லை என்று பாராளுமன்றத்தில், மத்திய அமைச்சர் பதில் அளிக்கிறார்.  ஒப்பந்தக் காரர்களின் பில்களை BSNL நிர்வாகம் தீர்வு காணாமல், அவர்கள் எவ்வாறு ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் தருவார்கள்?  மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியத்தைக் கூட தராமல், அவர்களை பெரும் எண்ணிக்கையில் பணி நீக்கம் செய்கிறது.  நிர்வாகத்தின் இந்த பாரபட்சமான, பொறுப்பற்ற தன்மை காரணமாக இதுவரை பத்து ஒப்பந்த தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இது போன்ற சம்பவங்கள், இந்திய நாட்டின் எந்த ஒரு பொதுத்துறையிலும் இதுவரை நடைபெற்றதில்லை.  இந்த பத்து மரணங்களுக்கும், அரசாங்கமும், BSNL நிர்வாகமுமே பொறுப்பாகும்.
அரசாங்கம் விடுத்துள்ள 21 நாட்கள் ஊரடங்கு என்பது இவர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது.  இதனால் மேலும் தற்கொலைகள் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம் அனைவரின் மனதிலும் எழுகிறது.  எனவே, இந்த ஊரடங்கு காலத்தில், இந்த ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட தேவையான நிதியினை திரட்டிட BSNL ஊழியர் சங்கம் முடிவெடுத்துள்ளது.  ஒப்பந்த ஊழியர்களுக்கு உதவி செய்திட தேவையான நிதியினை நிரந்தர ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்றோர்களிடம் திரட்டிட BSNL ஊழியர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
பல மாநிலங்கள் இந்த நிதியினை திரட்டிட அக்கறையுடன் முயற்சி செய்து வருகின்றன.  அதற்கு அனைவரின் மத்தியிலும் நல்ல ஆதரவு கிடைத்து வருகின்றது.  ஆனால் ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.  எனவே நன்கொடை வசூலை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.  நாம் ஒவ்வொருவரையும் அணுக வேண்டும்.
ஒப்பந்த ஊழியர்களையும், அவர்களின் குடும்பத்தாரையும் பட்டினியில் இருந்தும் தற்கொலைகளில் இருந்தும் காப்பாற்ற வேண்டியது நமது கடமையாகும்.  எனவே, ஒப்பந்த ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் காப்பாற்ற தாராளமாக நிதியுதவி செய்திட வேண்டும் என ஊழியர்களையும், நல விரும்பிகளையும் BSNL ஊழியர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

No comments:

Post a Comment