Saturday, 22 February 2014

வெண்மணி நினைவாலய திறப்பு விழா



வெண்மணி நினைவாலய திறப்பு விழா

25 ஆயிரம் பேரைத் திரட்ட விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு



தஞ்சாவூர்:வெண்மணி நினைவாலயத் திறப்பு விழாவிற்கு, 25 ஆயிரம் பேரைத் திரட்டுவது என விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் கடந்த 16ம் தேதி தஞ்சையில் மாநிலத் தலைவர் ஏ.லாசர் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. ஜி.மணி, எஸ்.திருநாவுக்கரசு, வி.அமிர்தலிங்கம், கே.பக்கிரிசாமி உட்பட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு:
மனிதர்களாக வாழ வேண்டும், உரிமை வேண்டுமென செங்கொடியின் கீழ் அணிதிரண்டு போராடிய விவசாய தொழிலாளர்கள் மீது நிலப்பிரபுக்கள் கொடூரமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டனர். குண்டர்களின் தாக்குதல், பொய்வழக்குகள், சிறை தண்டணையை விவசாயக்கூலிகள் சந்தித்தனர். போராடிய முன்னணித் தோழர்கள் கொல்லப்பட்டனர். அப்போதும் போராட்ட அலையை அடக்க முடியாததால், 1968ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி கீழ்வெண்மணி கிராமத்தில் ஒரு சிறு குடிசைக்குள் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என 44 பேரை தீயிட்டு கொளுத்தினார்கள். ரத்த வெறிபிடித்த நிலப்பிரபுக்களும் அவர்களின் அடியாட்களும்!உரிமைக்காக, செங்கொடியைக் காப்பதற்காகப் போராடி பலியான 44 தோழர்களின் நினைவாக பிரம்மாண்டமான நினைவாலயம் வெண்மணி கிராமத்தில் சி.ஐ.டி.யு வின் முன் முயற்சியால் எழுப்பப்பட்டுள்ளது. மார்ச் 9ல் வெண்மணி தியாகிகள் நினைவாலயம் திறப்பு விழா நாகை மாவட்டம் வெண்மணியில் நடைபெறுகின்றது. சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் தோழர்.பிரகாஷ்காரத் திறந்து வைக்கிறார். சி.ஐ.டி.யு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ தலைமையேற்கிறார்.25000 விவசாயத் தொழிலாளர்களை திரட்டி கீழ்வேளூரில் இருந்து ஊர்வலமாக கொடிகளுடன் சென்று அஞ்சலி செலுத்தி திறப்பு விழாவில் பங்கேற்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வெண்மணியில் உயிரோடு எரிக்கப்பட்ட 44 தியாகிகளை நினைவு கூரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் 44 புதிய கிராம கிளை அமைப்புகளை நடத்தி நிர்வாகிகளைத் தேர்வு செய்வது, மாவட்டங்கள்தோறும் விழாவினை விளம்பரப்படுத்துவது, கிராமம் கிராமமாக சென்று நோட்டீஸ் வினியோகம் செய்து விவசாயத் தொழிலாளர்களை திரட்டுவது, என மாநில நிர்வாகிகள் கூட்டம் முடிவு செய்துள்ளது. இம்முடிவினை சிறப்போடு நிறைவேற்றிட வேண்டுமென மாவட்டக்குழு இடைக்குழு கிளை நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment