Friday, 15 November 2013

மணல் அரசியல் Vs மக்கள்!


தெரிந்துகோல்வோம்

மணல் அரசியல் Vs மக்கள்!
பாரதி தம்பி
 தாது மணல் கொள்ளைக்கு எதிராக மக்களின் போராட்டங்களும் எதிர்ப்புக் குரல்களும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தென் தமிழகக் கடலோரத்தில் கேட்கின்றன. தாது மணல் நிறுவனங்களைப் பற்றி பேசினால் உயிர் இருக்காது என்ற அச்சத்தில் உறைந்திருந்த மக்கள், வாய் திறந்து பேசத் தொடங்கியுள்ளனர். ககன்தீப் சிங் பேடி தலைமையிலான ஆய்வுக் குழுவினரை தங்கள் ஊருக்கும் ஆய்வுக்கு வரச்சொல்லி மக்கள் மனு கொடுத்த காட்சி, புத்தம் புதியது.
''ஆனால், ககன்தீப் சிங் பேடியின் ஆய்வே, வெறும் கண்துடைப்பு. மக்களை நம்பவைத்துக் கணக்குக் காட்ட நடத்தப்படும் நாடகம். உண்மை யான பாதிப்பு மிகப் பிரமாண்டமானது. பல்லாயிரம் கோடி மதிப்புள்ள தாது வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. ஆபத்தான கதிரியக்கம்கொண்ட தனிமங்கள் அனுமதியின்றி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் வன்முறையாகச் சிதைக்கப்பட்டுள்ளது. இயற்கை சீரழிக்கப்பட்டுள்ளது. பலர் உயிர் இழந்துள்ளனர். இவை அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும். மொத்த தாது மணல் நிறுவனங்களும் இழுத்து மூடப்பட்டு அவர்களின் அனைத்துச் சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். அந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், இந்தக் கொள்ளைக்குத் துணைபோன அனைத்துத் துறை அரசு அதிகாரிகளும் கைதுசெய்யப்பட வேண்டும்!'' என்கிறார் வாஞ்சிநாதன். தாது மணல் அள்ளப்படும் பகுதிகளில் நடத்தப்பட்ட உண்மை அறியும் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் இவர். 'மனித உரிமை பாதுகாப்பு மையம்என்ற அமைப்பில் இருந்து சென்ற ஆய்வுக் குழுவினர், வி.வி. மினரல்ஸின் தாது மணல் ஆலைகளுக்குள் நுழைந்து அங்கு நடக்கும் முறைகேடுகளை புகைப்பட ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி உள்ளனர். ஒரு தாது மணல் ஆலையின் உட்பு றங்களும் செயல்பாடுகளும் பதிவாகியிருப்பது இதுவே முதல்முறை. வாஞ்சிநாதனிடம் பேசிய போது...

''இந்த கார்னெட் மணல் தொழிலில், ஆரம்பத்தில் அரசு நிறுவனம் மட்டும்தான் ஈடுபட்டது. 1970-களுக்குப் பிறகுதான் இதில் தனியார் அனுமதிக்கப்பட்டனர். வைகுண்டராஜன் இந்தத் தொழிலுக்குள் நுழைந்ததும் இதன் பிறகுதான். கடலோரக் கிராமங்களில் ஊர் கமிட்டி முறை உள்ளது. இவர்கள்தான் பெரும்பாலான விஷயங்களைத் தீர்மானிப்பார்கள். வைகுண்டராஜன், ஊர் கமிட்டிகளில் உள்ளவர்களை பல்வேறு வழிகளில் வளைத்துப்போட்டு தன் ஆதரவாளர்களாக மாற்றுகிறார். இவருக்கு ஆதரவாக கடலோரத்தில் ஒரு குழு உருவாகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் அவர்கள் இருப்பார்கள். அடியாள் போல என்று வைத்துக்கொள்ளலாம். வேறு வேலை எதுவும் அவர்களுக்குக் கிடையாது. மாதச் சம்பளம் மட்டும் வந்துவிடும். இதற்கு உள்ளூர் அரசியல்வாதிகள், காவல் துறை அனைவரும் ஆதரவு. இந்தத் தொழிலுடன் சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவுத் துறை, பொதுப்பணித் துறை, கனிமவளத் துறை, சுங்கத் துறை என அனைத்துத் துறைகளையும் தன் செல்வாக்கு எல்லைக்குள் கொண்டுவருகிறார். அவரைக் கேட்காமல் ஓர் அணுவும் அசையாது. இதுதான் வி.வி. என்ற பிரமாண்ட சாம்ராஜ்யம் கட்டி எழுப்பப்பட்டிருப்பதன் பின்னணி.
இன்னொரு முக்கியமான விஷயம், அரசின் கொள்கை மாற்றம். 1990-களுக்கு முன்பு, இந்தத் தொழிலை செய்வதற்கு நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. இயற்கை வளங்களை சீரழிக்கும் தொழிலைச் செய்ய வேண்டுமானால், பல இடங்களில் அனுமதி வாங்க வேண்டும், பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். 1991-ல் மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்த புதிய தாராளமயக் கொள்கை, இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. சட்டத்துக்குப் புறம்பானவையாக இருந்த அனைத்தும் சட்டபூர்வமானவையாக மாற்றப்பட்டன. சத்தீஸ்கரின் கனிம நிறுவனங்கள், கர்நாடகாவின் ரெட்டி சகோதரர்கள், தமிழ்நாட்டில் வி.வி.மினரல்ஸ் என நாடு தழுவிய அளவில் கனிம வளம் பெரும் அளவில் சுரண்டப்பட, அரசின் இந்தக் கொள்கை மாற்றம்தான் காரணம். ஆனால், பெரும் லாப ருசி பார்த்துவிட்ட நிறுவனங்கள், கொள்கை, சட்ட விதிகளுக்கு எல்லாம் உட்பட்டு இயங்குவது இல்லை. உதாரணம், கூடங்குளம் அணு உலையின் சுற்றுச்சுவரை ஒட்டி 'பஞ்சல்என்ற கிராமம் இருக்கிறது. அணு உலையையும் இந்தக் கிராமத்தையும் ஒரு சுற்றுச்சுவர்தான் பிரிக்கிறது. அந்தச் சுவர் வரைக்கும் தாது மணலைத் தோண்டி எடுத்திருக்கிறது வி.வி. மினரல்ஸ். பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. இத்தனைக்கும் அது பாதுகாக்கப்பட்ட பகுதி. அங்கு 300 ஏக்கர், வி.வி-யின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
எல்லா அரசியல் கட்சிகளும் வி.வி-க்கு ஆதரவாக இருக்கின்றன. கடந்த தி.மு.க. ஆட்சியில் வைகுண்டராஜன் மீது பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடனே அதை எதிர்த்து, 19.04.2007 அன்று, அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். எதற்கும் அசைந்துகொடுக்காத ஜெயலலிதா, 'வைகுண்டராஜன் மீதான நடவடிக்கை, ஜெயா டி.வி-யை முடக்கும் சதிஎன்று ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். இது, எல்லா ஊடகங்களிலும் அப்போது வெளிவந்துள்ளது. அத்தகைய  ஜெயலலிதா அரசு எடுக்கும் நடவடிக்கை நியாயமானதாக இருக்கும் என்று நம்புவதற்கு இல்லை. மக்களுக்கு இது மிக நன்றாகத் தெரிந்திருக்கிறது. பல ஊர்களில், 'அரசு மட்டும் வி.வி. பக்கம் இல்லை என்றால், பத்தே நாட்களில் அனைத்து மணல் கம்பெனிகளையும் மூடிவிடுவோம்என்று மக்கள் சொல்கிறார்கள். அவர்களின் அச்சம் அரசை நினைத்துதான். ஏனென்றால், கடந்த காலங்களில் மணல் நிறுவனங்களுக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு மோசமாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். அந்தக் காயத்தின் வடு இன்னும் அவர்களிடம் ஆற வில்லை.  
இப்படி சொல்வதால், 'அ.தி.மு.க- தான் வி.வி-க்கு ஆதரவாக இருக்கிறது, மற்றவர்கள் எல்லாம் இதை எதிர்க்கிறார்கள்என்று புரிந்துகொள்ளத் தேவை இல்லை. தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள், இந்தப் பிரச்னை எங்கேயோ எத்தியோப்பியா பக்கம் நடப்பதைப் போல மௌனம் காக்கின்றன. இந்து முன்னணியும் தென்னிந்திய திருச்சபையும் ஓரணியில் இணைந்து வைகுண்டராஜனை ஆதரித்து மனு கொடுக்கிறார்கள். சீமான், வைகுண்டராஜன் வீட்டுத் திருமணத்துக்குச் சென்று கலந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறார். ஆக, அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் இந்தச் சுரண்டலுக்கு ஆதரவாகவே இருக்கின்றனர்'' என்ற வாஞ்சிநாதன், ஆய்வில் தாங்கள் கண்ட பல அதிர்ச்சித் தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.  
''தாது மணல் ஆலைகள் ஒவ்வொன்றும் பெரிய இரும்புக் கோட்டையைப் போல இருக்கின்றன. சுற்றிலும் பெரிய மதில் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்குக்கூட உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அதன் அருகே ஐந்து நிமிடங்கள் நின்றாலே, விசாரிக்க ஆள் வந்துவிடுகிறார்கள். பெரியதாழை என்ற ஊரில் தாது மணல் சுரண்டப்பட்டதால், மொத்தக் கடற்கரையும் சிதைக்கப்பட்டுள்ளது. பல ஏக்கர் பரப்பளவுள்ள அந்த இடத்தில் கழிவு மணலைக் கொட்டி நிரப்பி எதுவுமே நடக்காததுபோல மாற்றியுள்ளனர். உவரி கடற்கரையிலும் இதேபோல நடந்துள்ளது. பாம்பன் தீவு முதல் தூத்துக்குடி வரையிலான கடற்பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இவை அனைத்தும் பாதுகாக்கப்பட்ட கடற்பகுதி. பல அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழும் இந்தப் பகுதியை 'மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பகம்என்று அழைக்கின்றனர். மீனவர்கள், இந்தப் பகுதியில் பெரிய வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தாலே கடும் தண்டனை உண்டு. ஆனால், இங்கு மோசமான விதிமீறல்களை நிகழ்த்தி தாது மணல் கழிவைத் திறந்துவிடுகின்றனர். கடல் நீர் சிவப்பு நிறத்தில் மாறிக்கிடக்கிறது. 'சிங்க இறால்என்ற நல்ல விலைபோகக்கூடிய மீன் வகைகள் இந்தப் பகுதியில் நிறைய கிடைத்துவந்தன. இப்போது அவை கிட்டத்தட்டஅழிந்துவிட்டன. ஆறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பெரியதாழைத் தூண்டில் வளைவு, தாது மணல் நிறுவனக் கழிவினால் மூடப்பட்டுவிட்டது. இதனால் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டு பலருக்கு தலை, கால், தண்டுவடம் அடிபட்டு முடமாகியுள்ளனர்.
மணல் கழிவுகள் கடற்கரையில் மலைபோல் குவிவதால் மீனவர்களின் படகுகளைக் கரையேற்ற முடியவில்லை. சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய்... என விதவிதமான நோய்கள் மீனவர்களைத் தாக்குகின்றன.
இப்படி மொத்தக் கடலோரமும் சொல்ல முடியாத அளவுக்கு சிதைக்கப்பட்டுள்ளது. மதுரையில் பி.ஆர்.பழனிச்சாமி கிரானைட் வளத்தைக் கொள்ளை அடித்ததற்காகக் கைதுசெய்யப்பட்டார். அதைவிட இங்கு 100 மடங்கு கொள்ளை நடந்துள்ளது. ஏன் இதுவரை வைகுண்டராஜனைக் கைதுசெய்யவில்லை? இப்போது மக்களிடையே சாதி, மதப் பிரச்னைகளைத் தூண்டிவிட்டு மோதல்களை உருவாக்கும் வேலை நடந்துவருகிறது. இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். தென் தமிழக மக்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்தும்கூட, இயற்கை வளங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற உத்வேகத்துடன் போராடிவருகின்றனர். அவர்களுக்கு, அனைவரும் துணை நிற்க வேண்டும்!'' என்கிறார் வாஞ்சிநாதன்!by ananda vikatan


No comments:

Post a Comment