Friday, 19 July 2019

SR பிரிவு எஸ்மா பிரிவா???!!!


        SR பிரிவு எஸ்மா பிரிவா???!!!  


சங்க அங்கீகார தேர்தலில், முதல் சங்கம், 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றது என்றாலும் கூட, இரண்டாவதாக வரும் சங்கத்திற்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில், அங்கீகார விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என BSNL ஊழியர் சங்கத்தின் மைசூரு அகில இந்திய மாநாடு ஏகமனதாக தீர்மானித்தது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில், சங்க அங்கீகார விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று BSNL ஊழியர் சங்கம் 10.01.2019 அன்றே நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்தது. ஆனால் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டிய SR பிரிவு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. அங்கீகார விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி நமது மத்திய சங்கம் பல நினைவூட்டல் கடிதங்களை எழுதியதுடன், GM(SR), DIRECTOR(HR) மற்றும் CMD BSNL ஆகியோர்களை சந்தித்து விவாதித்தும் உள்ளது. எனினும் இறுதி வரை கார்பரேட் அலுவலகத்தின் SR பிரிவு அதனை உறை நிலையிலேயே வைத்துவிட்டது. அதன் விளைவாக, BSNL ஊழியர் சங்கத்தின் கோரிக்கை அமலாக்கப்படாமல், கடந்த முறை உள்ள விதிகளின்படியே இந்த அங்கீகார தேர்தல் நடைபெற உள்ளது. இது தான் SR பிரிவின் செயல்திறன். ஆனால் BSNLல் அமைதியான முறையில் தர்ணா, ஆர்ப்பாட்டம் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது என்றால் அவற்றை தடை செய்ய இதே SR பிரிவு மூர்க்கத்தனமான வேகத்துடன் செயல்பட துவங்கிவிடுகிறது. 
AUAB அறைகூவலின் அடிப்படையில் 05.04.2019 அன்று நடைபெற்ற ‘சஞ்சார் பவன் நோக்கிய பேரணி’யை சீர்குலைக்க SR பிரிவு எத்தனை எதிர்மறையான கடிதங்களை வெளியிட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல நாடு முழுவதும் உள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆறு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 16.07.2019 அன்று தர்ணா நடத்த BSNL ஊழியர் சங்கமும் BSNLCCWFம் அறைகூவல் விடுத்தவுடன், மீண்டும் வேகத்துடன் செயல்பட துவங்கியுள்ளது. ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டங்களை நடத்தும் சங்கங்கள், 8வது சங்க அங்கீகார தேர்தலில் போட்டியிட தடை செய்யப்படும் என 02.07.2019 அன்று SR பிரிவு, ஒரு மிரட்டல் கடிதத்தை வெளியிட்டுள்ளது. மீண்டும் 12.07.2019 அன்று, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள்/ தர்ணாக்கள் நடத்துகின்ற, ஏற்பாடு செய்கின்றவர்கள் மீதான ஆதாரங்களை திரட்டி அனுப்ப வேண்டுமென, அனைத்து தலைமை பொது மேலாளர்களுக்கும் மற்றொரு கடிதத்தை வெளியிட்டுள்ளது. இந்த மிரட்டல்களையெல்லாம் மீறி நாடு முழுவதும் அந்த தர்ணா போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. 
தொழிற்சங்கங்களுக்குள்ள அமைப்புச் சட்ட உரிமைகளை பறிக்க முடியாது என்பதை SR பிரிவு புரிந்துக் கொள்ள வேண்டும். தொழிற்சங்கங்களின் உரிமைகளுக்கு தடை விதிப்பதைக் கைவிட்டு விட்டு, நிறுவனத்திற்கு ஏதாவது உறுப்படியான வேலைகளை செய்ய வேண்டுமென்பதே நமது தாழ்மையான வேண்டுகோள். செய்யுமா?

No comments:

Post a Comment