Showing posts with label நவம்பர் புரட்சி. Show all posts
Showing posts with label நவம்பர் புரட்சி. Show all posts

Thursday, 7 November 2013

நவம்பர் புரட்சி



புரட்சி வகுத்துக் கொடுத்த பாதை
க.ராஜ்குமார்


நவம்பர் புரட்சி முடிந்து லெனின் தலைமையில் சோவியத் அரசு அமைக்கப்பட்டபோது தோழர் ஸ்டாலின் உள்பட 10 தோழர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். முதல் நாள் அன்று இரண்டு ஆணைகளை லெனின் பிறப்பித்தார். முதல் ஆணை போரிடும் நாடுகள் போரினை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், நிலப்பரப்புகளை கைப்பற்றாமல், போரினால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈட்டுத்தொகை கோருவதை தவிர்த்து ஜனநாயக சமதான உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும் என்ற ஆணையை நிறைவேற்றினார்.
இந்த தீர்மானம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த பல்வேறு நாடுகளுக்கு நம்பிக்கையை அளித்தது. முதலாவதாக அமைந்த சோவியத் அரசு உலக சமாதானத்திற்கு அறைகூவல் விடுத்தது ஏகாதிபத்தியத்தின் போர்வெறியிலிருந்து விடுபடலாம் என்று எல்லோரும் பெருமூச்சு விடுவதற்கு வாய்ப்பளித்தது. சோவியத் அரசின் இரண்டாவது ஆணை நிலம் பற்றியது. ஜார் குடும்ப நிலங்கள் எல்லாம் எவ்வித ஈட்டுத்தொகையும் இல்லாமல் நாட்டுடைமையாக்கப்பட்டது ஆகும். நிலத்தின் மீது தனி உடமை அகற்றப்பட்டது. புரட்சி நடந்த அன்றே நிறைவேற்றப்பட்ட இந்த இரண்டு ஆணைகளும் உலகத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.
லெனின் தலைமையில் அமைந்த சோவியத் அரசு உலகில் முதன் முதலாக தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம், ஓய்வூதியம், விடுப்பு மற்றும் மருத்துவ காலபிற நாடுகளில் உள்ள அரசுகள் அந்நாட்டு தொழிலாளர்களுக்கும் தரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மேலும் சோவியத் ரஷ்யா, காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலைப்பெற்ற இந்தியா போன்ற நாடுகளின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவிற்று. இது பொருளாதார வளர்ச்சிக்கு மற்ற நாடுகள் தன்னை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்று நினைத்த அமெரிக்காவிற்கு பெரும் சவாலாக அமைந்தது.
தன்னைத் தானே உலகத்தின் காவலனாக அறிவித்துக்கொண்ட அமெரிக்காவிற்கு இது கடுமையான அதிர்ச்சியை தந்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் ஆட்சியும் ஒவ்வொரு தலைமுறைக்கும் புரட்சி தேவை என்ற லெனின் கோட்பாட்டை மறந்ததின் விளைவாக அங்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. எனினும் நவம்பர் புரட்சியோ அது வகுத்து கொடுத்த பாதையோ தவறு என்ற முடிவுக்கு யாரும் போய்விட முடியாது.
கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனையாகவே நவம்பர் புரட்சி திகழ்கிறது. சோவியத் பின்னடைவு ஏற்பட்டு இருபது ஆண்டுகளுக்குப்பிறகு இன்றைய உலக நிகழ்வுக்ள் அதை உண்மை என்று நிரூபித்து வருகின்றன. முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியும் அதிலிருந்து மீள உலகத்திலுள்ள உழைப்பாளிமக்களின் மீது தனது சுமையை சுமத்த முதலாளித்துவம் முயற்சி செய்வதும் அதற்கு எதிரான போராட்டங்கள் வெடித்து கிளம்புவதும் சோசலிசமே நெருக்கடிக்கு தீர்வாக அமையும் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
மாமருந்து
அந்தந்த நாடுகளில் நிலவி வரும் அரசியல் நிலையற்ற நிலைமைகளை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு ஆதாயம் தேட ஏகாதிபத்தியம் முயல்கிறது. இதனுடைய ஒரு பகுதி தான் இந்தியாவில், தற்போது மன்மோகன் சிங் அரசு மேற்கொண்டுவரும் பொருளாதார சீர்திருத்தங்கள் என்றபெயரில் மக்கள் மீதான தாக்குதல்கள் அமெரிக்காவின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதில் இன்று மத்திய அரசு இந்திய நாடாளுமன்ற ஜனநாயத்திற்கே வேட்டு வைக்கிறது. அமைச்சரவை கூட்டங்களிலேயே இன்று சாதாரண இந்தியனின் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது.
உலகமயம், தாராளமயம், தனியார் மயம் போன்ற கொள்கைகளை அமல் படுத்துவதின் காரணமாகவே இன்று மைய அரசிலும் பெரும்பான்மையான மாநில அரசுகளிலும், தலைவிரித்தாடும் லஞ்சமும், ஊழலும். மக்களிடையே தலைவிரித்தாடும் வறுமைப் பசியும் ஆகும். தற்கொலை, வேலையின்மை, பாலின சுரண்டல் உள்ளிட்ட பல கொடிய உயிர்க்கொல்லி நோய்களை இது உருவாக்கியுள்ளது.
இதற்கு மருந்து உழைக்கும் மக்களின் ஒற்றுமையை விரிவாக்கி போராட்டங்களை ஒருங்கிணைத்து, சோசலிச சக்திகளை வலுப்பெறச் செய்து அரசியல் அதிகாரம் பெற வைப்பதுமே ஆகும். இந்த சமூக மா மருந்து உருவாகுமிடம் தொழிற்சங்க கூடங்களே! இதை உருவாக்கும் மருத்துவர்கள் தொழிலாளர்களே! சீரிய இப்பணியினை செய்து முடிக்க நவம்பர் புரட்சி வகுத்துக் கொடுத்த பாதையில் முன்னேறுவோம்.