Monday 14 October 2013

நிர்வாக முடக்கத்துக்கு தீர்வு காண ஒபாமா தீவிர முயற்சி


Return to frontpage

நிர்வாக முடக்கத்துக்கு தீர்வு காண ஒபாமா தீவிர முயற்சி 


அமெரிக்க நிர்வாக முடக்கத்துக்கு தீர்வு காண எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன் அதிபர் ஒபாமா தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அக்டோபர் 1-ல் நிதியாண்டு தொடங்கிய நிலையில் புதிய பட்ஜெட்டுக்கு குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மை வகிக்கும் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் கடந்த இருவாரங்களாக அமெரிக்க நிர்வாகம் முடங்கியுள்ளது.
இதனிடையே, அக்டோபர் 17-ம் தேதிக்குள் அமெரிக்காவின் கடன் உச்சவரம்பும் உயர்த்தப்பட வேண்டும். இல்லையெனில் அமெரிக்கா கடும் நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும்.
இந்த விவகாரங்களால் அதிபர் ஒபாமா தனது 10 நாள்கள் ஆசிய பயணத்தை ரத்து செய்துவிட்டு வெள்ளை மாளிகையிலேயே தங்கியிருக்கிறார். கடந்த புதன்கிழமை ஆளும் கட்சியான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாகச் சந்தித்துப் பேச, பிரதிநிதிகள் சபையில் அங்கம் வகிக்கும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் அதிபர் மாளிகை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், பிரதிநிதிகள் சபைத் தலைவர் ஜான் போனெர், உறுப்பினர்கள் அனைவரும் வெள்ளை மாளிகைக்கு செல்வதைத் தடுத்து சிறிய குழுவை மட்டுமே அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ஒபாமா, குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன் தனித்தனியாக தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதன்மூலம் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண முடியும் என்று ஜனநாயகக் கட்சியினர் நம்புகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ஒபாமா, நிர்வாக முடக்கத்துக்கு முழுக்க முழுக்க குடியரசுக் கட்சியினரே காரணம் என்று குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சியினர் எதற்காகப் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவே இல்லை என்றும் ஒபாமா வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
அனைத்துப் பணிகளும் முடக்கம்
ஆப்கானிஸ்தானில் சில நாள்களுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். சட்டவிதிகளின்படி அவர்களின் குடும்பங்களின் அவசரச் செலவுக்கு 3 நாள்களில் தலா ரூ.62 லட்சம் வழங்கப்பட வேண்டும். ஆனால், நிர்வாக முடக்கம் காரணமாக 4 வீரர்களின் குடும்பங்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை.
அதேபோல், உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்குள் தலா ரூ.2 கோடியே 50 லட்சம் வழங்கப்பட வேண்டும். இந்த நிவாரண உதவித் தொகை வழங்கப்படுவதும் தடைபட்டுள்ளது.
மேலும், அன்டார்டிகாவில் அமெரிக்க நிதியுதவியுடன் நடைபெற்று வந்த அனைத்து ஆராய்ச்சிப் பணிகளும் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment