Tuesday 4 February 2020

BSNL வரலாற்றில் 31.01.2020, ஒரு கருப்பு தினம்




BSNL வரலாற்றில் 31.01.2020, ஒரு கருப்பு தினம்
BSNL வரலாற்றில் 31.01.2020 என்பது ஒரு கருப்பு தினம். விருப்ப ஓய்வு திட்டம்-2019ன் கீழ் 78,459 ஊழியர்களும் அதிகாரிகளும் ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். BSNLன் புத்தாக்கம் என்ற பெயரில் இது நடைபெற்றுள்ளது. விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் BSNL, மீண்டெழும் என்று தம்ப்பட்டம் அடிக்கப்பட்டது. எனினும், புத்தாக்கத்திட்டம் அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் முடிவடைந்து விட்ட போதும், BSNL நிறுவனத்தால் 4G சேவையை இன்னமும் வழங்க இயலவில்லை. இன்னமும், ஊழியர்களுக்கு, குறிப்பாக விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களுக்கு கூட ஊதியம் தர BSNLல் பணம் இல்லை. BSNL, அரசாங்கத்தின் மிக முக்கியமான சொத்து என்று அமைச்சர் கூறுகின்ற போதும், மற்ற பொதுத்துறைகளில் நடப்பது போலவே, BSNLஐ தனியார் மயமாக்கிடவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மீண்டும் BSNL நிறுவனத்தை லாபமீட்டும் நிறுவனமாக மாற்றி, BSNLஐ தனியார் மயமாக்கும் அரசின் முயற்சிகளை பின்னுக்கு தள்ளுவதே நமது பிரதான கடமை.

LICயின் பங்குகலை விற்பனை




LICயின் பங்குகலை விற்பனை செய்வதில் நரேந்திர மோடி அரசாங்கம் தனது முடிவை தெரிவித்துள்ளது.
01.02.2020 அன்று பாராளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது, நிதியமைச்சர் திருமிகு நிர்மலா சீதாராமன், இந்த நிதி ஆண்டில் LICயின் பங்குகளை அரசு விற்பனை செய்யும் என்று அறிவித்தார். இது ஒரு மிக கொடூரமான முடிவு. LIC என்பது இந்திய அரசாங்கத்தின் மதிப்பு மிக்க ஆயுள் காப்பீட்டு நிறுவனம். அது தேசத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பொருளாதார உதவிகளை செய்து வருகிறது. இருந்த போதும், இந்திய நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் பேராசையின் காரணமாக, மத்திய நரேந்திர மோடி அரசாங்கம் LICயையும் தனியார் மயப்படுத்த முடிவு செய்துள்ளது. பங்கு விற்பனை என்பது தனியார்மயத்தின் துவக்கமே. ஏர் இந்தியா மற்றும் BPCL ஆகியவற்றின் தனியார்மயமாக்கலை ஒட்டியே அரசு, இந்த முடிவுகுக்கும் வந்துள்ளது. BSNLன் பங்கு விற்பனை மற்றும் தனியார் மயமாக்கல் வெகு தொலைவில் இல்லை என்பதையே இது சுட்டிக் காட்டுகின்றது. LICயின் பங்கு விற்பனை செய்யும் அரசின் முடிவை BSNL ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்க்கின்றது. LICயின் பலம் பொருந்திய அமைப்பான AIIEA, வேலை நிறுத்தம் உள்ளிட்ட எதிர்ப்பு இயக்கங்களை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள BSNLஊழியர் சங்கத்தின் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும், AIIEAவின் அனைத்து இயக்கங்களுக்கும் தங்களின் ஆதரவை தெரிவிக்க வேண்டும்.