இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதே நோபல் பரிசுகளை வழங்கும் பொறுப்பு நம் தெனாலிராமனிடம் ஒப்படைக்கப்பட்டால் அவர் யாருக்கெல்லாம் பரிசு வழங்குவார்? - ஒரு கற்பனை
அமைதிக்கான நோபல் பரிசு
அமைதி என்றாலே இந்திய அகராதியில் மன்மோகன் சிங் என்றுதான் அர்த்தம். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் என்ன நடந்தாலும் கொஞ்சம்கூட அசராமல், எதைப்பற்றியும் வாய்திறக்காமல் தன் பதவியை மட்டும் காப்பாற்றிக்கொண்ட செயல்வீரர் மன்மோகன் சிங். எல்லையில் சீன ராணுவம் ஊடுருவினாலும் சரி, ராகுல் காந்தி ‘நான்சென்ஸ்’ என திட்டினாலும் சரி... பதிலுக்கு வாயே திறக்காமல் பதவிக்காலத்தை ஓட்டியது இவரது மாபெரும் சாதனை. எனவே இந்த விருது சந்தேகமே இல்லாமல் மன்மோகன் சிங்குக்குதான்.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு
பிரதமருக்கு அப்படியே நேர் மாறானவர் நம் தமிழக முதல்வர். செயலிலும் பேச்சிலும் இவரது வேகத்துக்கு இணை இவர்தான். அதிலும் குட்டிக்கதைகளை சொல்வ தில் இவரை விஞ்ச ஆள் இல்லை. திருமண நிகழ்ச்சி முதல், அரசு நிகழ்ச்சிகள் வரை பேசும் இடங்களில் எல்லாம் குட்டிக் கதைகளைக் கூறி எதிர்க்கட்சிகளைக் குட்டும் இவருக்கு இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் விருது வழங்கப்படுகிறது.
அறிவியலுக்கான நோபல் பரிசு
கூடங்குளம் அணுமின் நிலைய விஷயத்தில் விஞ்ஞானிகளே அமைதி காத்தாலும், தன் விமான நிலைய பேட்டிகளில் அதிரடி கருத்துக்களை வெளியிட்டு எல்லோரையும் திகைக்க வைப்பவர் மத்திய அமைச்சர் நாராயணசாமி. கூடங்குளம் என்றில்லை, மின்வெட்டு போன்ற விஷயங்களுக்கும் இந்திய மக்களுக்கு இவர்தான் சந்தேக நிவாரணி. எனவே இந்த ஆண்டின் அறிவியலுக்கான நோபல் பரிசை பெற தகுதியான நபர் நாராயணசாமிதான்.
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு
இந்தியப் பொருளாதாரம் முன்னேற வேண்டுமானால், பெண்கள் தங்கம் வாங்கக்கூடாது, பெட்ரோலை சிக்கன மாக பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற பொருளாதார சித்தாந்த கருத்து களை நாளெல்லாம் விதைத்துவரும் ப.சிதம்பரத்துக்குதான் இந்த ஆண்டின் நோபல் பரிசு. ரூபாயின் மதிப்பு சிதைந்தாலும் அதைப்பற்றி யெல்லாம் கவலைப்படாமல் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சென்று வங்கிக் கிளைகளை திறந்து வைத்தது இவரது செயல் ஆற்றலுக்கு மற்றொரு சான்று