தேசத் துரோகக் குற்றப்பிரிவு நீக்கப்பட வேண்டும்
புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சிப்போக்குகள், உடன்பாடின்மை, பேச்சுரிமை மற்றும் அடிப்படை பிரஜா உரிமைகள் போன்று எண்ணற்ற பிரச்சனைகள்மீதே விவாதத்தை எழுப்பி இருக்கின்றன. தற்போது அங்கே இந்துத்துவா வாதிகள் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் குறித்து தி இந்து செய்தியாளர் ஸ்மிதா குப்தாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான பிரகாஷ் காரத் பேட்டி அளித்திருக்கிறார். அதன் சாராம்சம் வருமாறு:
கேள்வி:
ஜேஎன்யு நெருக்கடி இடதுசாரிக் கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கி இருக்கிறதா?பிரகாஷ்காரத்: அரசாங்கம், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தங்கள் மாணவர் அமைப்பான ஏபிவிபியைப் பயன்படுத்திக்கொண்டு நாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனங்களில் தங்கள் அரசியல் மற்றும் சித்தாந்த மேலாதிக்கத்தை நிறுவ முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. இந்துத்துவாவின் நடவடிக்கைகளுக்கு இடதுசாரி தலைமையிலான மாணவர் அமைப்புகள் உறுதியான முறையில் எதிர்ப்பினை அளித்து வருகின்றன. இதில் இவர்களின் பிரதான குறி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமாகும். ஏனெனில் இப்பல்கலைக் கழகம் தில்லியில் இருந்தபோதிலும் இவர்களின் தாக்குதலை மிகவும் வெற்றிகரமாக முறியடித்து வந்திருக்கிறது.
இப்பல்கலைக் கழகத்தில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் தேச விரோத நடவடிக்கைகளை அரசாங்கமும், பாஜகவும், ஆர்எஸ்எஸ்-சும் வேண்டும் என்றே மிகவும் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஜேஎன்யு தேச விரோதிகளின் கூடாரமாக இருப்பதாக முத்திரைகுத்தப்பட்டிருக்கிறது. இவர்களின் அடிப்படைக் குறி இடதுசாரிகள்தான். ... இதுபோன்று ஜேஎன்யுவில் மட்டுமல்ல, ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகம், சென்னை ஐஐடியில் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தாக்குதல், புனேயில் உள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இன்ஸ்டிட்யூட்டைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி போன்று பல்வேறு இடங்களிலும் நடந்திருக்கின்றன.
இவ்வாறான இவர்களின் தாக்குதல்கள் ஜனநாயக மாண்புகளுக்கும், பல்கலைக் கழகங்களின் சுயாட்சிக்கும் ஓர் அச்சுறுத்தலாக முன்வந்திருக்கின்றன. இவ்வாறு இவர்கள் இடதுசாரிகளுக்கு எதிராக நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். இவ்வாறான இந்துத்துவாவின் தாக்குதலுக்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளையும் அணிதிரட்ட இதனை ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறோம்.
பணிய வைக்க முடியாதுகேள்வி:
பாஜக, இடதுசாரிக் கட்சிகளையும் மாவோயிஸ்ட்டுகளையும் ஒட்டுமொத்தத்தில் இடதுசாரிகள்தான் என்று சித்தரிக்கிறதே, அப்படித்தான் மக்கள் மனதில் எவ்விதப் பாகுபாடும் இல்லாதிருக்கிறார்கள் என்று கூறுகிறதே.பிரகாஷ்காரத்: இடதுசாரிகள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக தேச விரோதிகள் என்று முத்திரை குத்தி அரசாங்கம் விரித்துள்ள வலையில் நாங்கள் வீழ்ந்திட மாட்டோம். அதேபோன்று இடதுசாரிகளிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், மோசமானவர்களும் இருக்கிறார்கள் என்று பாகுபடுத்த முயற்சிக்கும் வலையிலும் நாங்கள் விழ மாட்டோம். ஜேஎன்யுவைப் பொறுத்தவரை, தேசத் துரோகக் குற்றம் ஒரு மாணவரின் செயல்பாட்டுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அவர் கூறியவற்றை நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்ற போதிலும், அவர் கூறிய கூற்று “இராசத்துரோகம்’’ அல்லது “தேசத் துரோகம்’’ என்ற குற்றப்பிரிவின் கீழ் வருவதற்கான தகுதியற்றது.ஒரு வளாகத்திற்குள் அரசியல் விவாதங்கள், கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். இடதுசாரிகளுக்குள்ளேகூட வித்தியாசங்கள் உண்டு.
நாங்கள் மாவோயிஸ்ட்டுகளுடன் ஒத்துப்போவதில்லை அல்லது மேடை அமைத்துக்கொள்ளவில்லை. நாங்கள் அவர்களின் அரசியலையும் உத்திகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், ஜேஎன்யுவில் பிரதானமாக இது ஓர் அரசியல் நடவடிக்கை. ஆனால் அதன் மூலம் அவர்கள் வன்முறையில் ஈடுபடவுமில்லை, வன்முறையைத் தூண்டவுமில்லை. அவர்கள் எழுப்பிய முழக்கத்தை அல்லது அவர்கள் நிலைப்பாட்டை நாங்கள் ஏற்காதிருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் தேசத் துரோகக் குற்றப்பிரிவின் கீழ் காவல்துறையினர் தலையிட்டிருப்பதையும், மாணவர்களைக் கைது செய்திருப்பதையும் நாங்கள் எதிர்க்கிறோம். இந்தியத் தண்டனைச் சட்டத்தில் உள்ள தேசத் துரோகக் குற்றப்பிரிவு கிழித்தெறியப்பட வேண்டும். அது ஒரு அரக்கத்தனமான பிரிவு. ஆட்சியாளர்களுடன் ஒத்துப்போகாத, அரசின் கொள்கைகளை எதிர்க்கிற, கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்துகிறவர்கள் மீது அக்குற்றப்பிரிவு மிகவும் விரிவானமுறையில் பயன்படுத்தப்படுகிறது. நாங்கள் தேச விரோதிகள் என்று வலதுசாரிகளால் இப்போது குற்றம் சுமத்தப்பட்டிருப்பது மட்டுமல்ல, எங்கள் கட்சி 1964இல் உருவான காலத்திலேயே நாங்கள் அவ்வாறு முத்திரைகுத்தப்பட்டோம். இத்தகைய அச்சுறுத்தல்களால் எல்லாம் எங்களை அடிபணிய வைத்துவிட முடியாது.
கேள்வி:
ரோஹித் வெமுலா இடதுசாரியாக இருந்து, மிகவும் அதிதீவிர இடதுசாரி அமைப்பான அம்பேத்கர் மாணவர் சங்கத்திற்கு சென்றிருக்கிறார். ...பிரகாஷ்காரத்: ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் ஏராளமான தலித் அமைப்புகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றில் ரோஹித் செயல்பட்டிருக்கிறார். அவர்களில் சிலர் இடதுசாரி மாணவர் அமைப்புகளின் மாணவர் தேர்தல்களில் செயல்பட்டிருக்கின்றனர். உண்மையில் இப்போது அங்கேயுள்ள மாணவர் அமைப்பானது, இந்திய மாணவர் சங்கம் மற்றும் தலித் மாணவர் சங்கத்தின் கூட்டணி அமைப்பாகும். அது அம்பேத்கர் மாணவர் அமைப்பு அல்ல. பல பிரச்சனைகள் இடதுசாரி அமைப்புகளுக்கும் தலித் மாணவர் அமைப்புகளுக்கும் பொதுவானவைகளாகும். ஒவ்வொரு அமைப்புக்கும் சொந்த நிகழ்ச்சிநிரல் மற்றும் மேடை உண்டு. ஆயினும் பல பிரச்சனைகளில் அவர்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.
கல்வி அமைப்பை மாற்றும் போராட்டம்
கேள்வி : பல்கலைக்கழக அரசியலில் தலித் மாணவர்கள் பிரவேசம் ஒரு புதிய பரிணாமமா? பிரகாஷ்காரத் : நிச்சயமாக இது ஒரு மாற்றம்தான். பெரும் எண்ணிக்கையிலான தலித் மாணவர்கள் தங்கள் உரிமைகளையும் கருத்துக்களையும் வளாகத்திற்குள் நிலைநாட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இவற்றில் அதிகமான அளவு அவர்களின் கல்வி சம்பந்தப்பட்ட விவகாரங்களாக இருக்கும். தலித்துகள் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்தபோது, அவர்களுக்கு எதிரான ஓர் அமைப்புமுறை அங்கே இருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். கற்பிக்கப்படும் பாடங்கள் கூட பழைய சமூக அமைப்பையே பிரதிபலிக்கின்றன. தங்கள் பாடத்திட்டம்பற்றி, தங்கள் ஆய்வு குறித்து, அவர்கள் தங்கள் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்கிறபோது பிரச்சனைகள் வருகின்றன.ரோஹித் மற்றும் சில தலித் மாணவர்களும், அமைப்புகளும் கல்வி அமைப்புமுறையையே மாற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். பாடத்திட்டங்களும் ஆராய்ச்சிகளும் மேலும் விரிவான முறையில் அமைந்திட வேண்டும் என்று அவர்கள் கோரி வந்தனர். கேள்வி: எனவே, இத்தகைய இவர்களின் முயற்சிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற ஒரு கட்சியின் நிலை என்ன?பிரகாஷ் காரத்: இவர்களின் மத்தியில் உள்ள பிரச்சனைகள் இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்கு நன்கு தெரியும். கடந்த இருபதாண்டுகளில் இவைகுறித்து அவர்கள் மிகவும் தெளிவாய் புரிந்துகொண்டு வித்தியாசமாய் செயல்பட்டிருக்கிறார்கள்.
30, 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஜேஎன்யு இப்போது இல்லை என்பதை என்னால் பார்க்க முடிகிறது. இடதுசாரி மாணவர் அமைப்புகள் தலித் மற்றும் பாலினப் பிரச்சனைகளையும் இணைத்துக்கொண்டு இயக்கங்களை நடத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அவை பாடத்திட்டங்களிலும் சேர்க்கப்பட வேண்டும் என்று அவர்கள் போராடுகிறார்கள். பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான போராட்டம் அல்ல, மாறாக அங்கே என்ன சொல்லித்தரப்பட வேண்டும் என்பதற்கான போராட்டமாகும். தலித் மற்றும் சிறுபான்மை அமைப்புகள் சில தங்கள் பிரச்சனைகளைத் தனியே பார்த்துக்கொள்ளலாம் என்று கருதுகின்றன. எனினும் அவர்களுக்கிடையே நல்லதொரு பிணைப்பு ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பிடத்தக்க மாற்றம்
கேள்வி : 1970களில் நீங்கள் ஜேஎன்யு மாணவர் சங்க தலைவராக இருந்திருக்கிறீர்கள். அப்போதிருந்த மாணவர்களுக்கும் இப்போதுள்ள மாணவர்களுக்கும் இடையே தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது, அல்லவா?பிரகாஷ் காரத் : ஜேஎன்யுவில் நாங்கள் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான கொள்கை மேலும் விரிவானதாக அமைந்திட வேண்டும் என்ற போராட்டத்தினை முன்னெடுத்துச் சென்றோம். ஓராண்டு கழித்து, பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருந்த மாணவர்கள் குறித்து ஓர் ஆய்வினை மேற்கொண்டோம். தில்லியில் உயர்ந்தோர் குழாம் (நடவைந) மாணவர்கள் படிக்கும் மூன்று அல்லது நான்கு கல்லூரிகளிலிருந்துதான் பெரும் எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள்.
இதனைப் பார்த்துவிட்டு நாங்கள் சொன்னோம், “இல்லை, இது ஒரு தேசிய அளவிலான பல்கலைக்கழகமாகும். நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு இது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சமூக-பொருளாதாரப் பின்னணியில் மாணவர்கள் நாடு முழுவதுமிருந்து இதில் சேர்க்கப்பட வேண்டும்,’’என்றோம். 1973-74இல் ஒரு புதிய கொள்கை முன்வைக்கப்பட்டது. 1980களுக்குப்பின் பல்வேறுபட்ட மாணவர்களும் வரத் தொடங்கினார்கள். இப்போது, தொழிலாளர் வர்க்கப்பிரிவிலிருந்தும், ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்தும் நிறைய மாணவர் தலைவர்கள் முன்னேறி வந்திருக்கிறார்கள். ரோஹித் மற்றும் கன்னய்ய குமார் முதலானோர் தலைவர்களாகி இருப்பது இதைத்தான் பிரதிபலிக்கிறது.
கன்னய்ய குமாரின் தாயார் ஓர் அங்கன்வாடி ஊழியர். ரோஹித்தின் தாயார் தையல் மற்றும் சில்லரை வேலைகளைச் செய்து ஜீவனம் நடத்தி வந்தார். இத்தகைய மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்ந்ததுமட்டுமில்லை, அங்கே பயிலும் மாணவர்களின் தலைவர்களாகவும் உயர்ந்திருக்கிறார்கள். இது மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
புதிய அலை -கொதி நிலை
கேள்வி: நாட்டில் மாணவர் இயக்கங்களின் புதிய அலையை பார்த்துக் கொண்டிருக்கிறோமா?பிரகாஷ் காரத்: நிச்சயமாக. நாட்டில் மாணவர் அமைப்புகளின் புதிய அலை வீசிக் கொண்டிருக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தத்தொடங்கிய 1960-70களுக்குப்பின் கல்வி அமைப்பில் ஏராளமானவை நடந்திருக்கின்றன. கல்வி தனியார்மயம் மற்றும் வணிகமயமாகி இருக்கிறது. நீங்கள் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் இதுபோன்று ஸ்தாபனரீதியான மாணவர் அமைப்புகளைப் பார்க்க முடியாது. ஆனால் மற்றொரு விதமான அலையும் வீசிக் கொண்டிருக்கிறது. கல்வி நிறுவனங்களின் சுயாட்சி, மாணவர்களின் ஜனநாயக உரிமைகள், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை தொடர்பான பிரச்சனைகள் முதலான மாபெரும் பிரச்சனைகள் மாணவர்கள் மத்தியில் விவாதப் பொருளாகியுள்ளன, இதன்பின்னே பெருமளவிலான மாணவர்கள் அணிதிரண்டு வருகிறார்கள். ஹைதராபாத்திலும் அதை நாம் பார்த்தோம், இப்போது ஜேஎன்யுவிலும் பார்க்கிறோம்.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இத்தகைய கொதிநிலையைப் பார்க்க முடிகிறது.1970களில் இருந்த நிலைமை வேறு. அதிகப் பணம் கறக்கின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் அப்போது கிடையாது. அப்போது நீங்கள் ஒரு கல்லூரிக்குள் நுழைந்துவிட்டால் உங்கள் ஒரே லட்சியம் பட்டம் எப்படி பெறுவது, பின் வேலை எப்படி பெறுவது என்பதுதான். இப்போது அரசாங்கத்தின் கீழான கல்வி நிலையங்கள் குறைந்து விட்டன, முன்பு இருந்த அளவிற்கு இல்லை. தனியார் நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் அணிதிரள்வதிலும் அதேபோன்று கூட்டுபேர நடவடிக்கையில் இறங்குவதிலும் சிரமங்கள் இருக்கின்றன. ஆனாலும் அவர்களும் இப்போது வெளிவந்து
பொதுவான கிளர்ச்சிகளில் ஈடுபடத்தொடங்கி இருக்கிறார்கள். தமிழில்: ச..வீரமணி
by
No comments:
Post a Comment