மக்களின் பிஎஸ்என்எல் எப்படி வீழ்த்தப்படுகிறது?
ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் செயல்பாடு வெறுமனே லாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அல்ல. மக்கள் சேவையே பிரதானம். இன்றைக்கும் 98% கிராமங்களில் பிஎஸ்என்எல் நிறுவனமே சேவை அளித்துவருகிறது.
சென்னைப் பெருமழை வெள்ளத்தில் பிஎஸ்என்எல் மட்டுமே தொடர்ந்து சேவையை வழங்கியது. இதற்காக டீசல் ஜெனரேட்டர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் இயக்கப்பட்டன. தலைமைப் பொது மேலாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை இரவு பகலாக வீட்டை மறந்து வேலை பார்த்து தகவல் தொடர்பு அறுந்துபோகாமல் பார்த்துக்கொண்டனர். சென்னை விமான நிலையத்தில் நீரில் மூழ்கிய கருவிகளைச் சீரமைத்து தொடர்பை மீண்டும் ஏற்படுத்த அதன் ஊழியர்கள் நீந்திச் சென்று சேவையாற்றினர்.
மழை, வெள்ளத்தில் சிக்கியவர்கள் தங்களுடைய உறவினர்கள், நண்பர்களுக்குத் தகவல் சொல்ல ஒரு வாரத்துக்குக் கட்டணமில்லா சேவை அளிக்கப்பட்டது. தொலைபேசிக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு 2 வாரம் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. அதே வேளையில், தனியார் நிறுவனங்கள் சேவையை நிறுத்திவிட்டன.
அரசு நிர்வாகிகளின் உள்நோக்கம் எப்படி இருந்தாலும் துறையின் 2.5 லட்சம் ஊழியர்கள் தங்களுடைய கடமையை நிறைவாகவே செய்கின்றனர். 2006 வரையில் பிஎஸ்என்எல். ஆண்டுதோறும் ரூ.40,000 கோடி வருவாய் ஈட்டியது. ரூ.8,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை லாபம் கிடைத்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக வருவாய் தொடர்ந்து சரிகிறது. இதற்கான காரணம் உரிய காலத்தில் கருவிகளை வாங்க முடியாதது. அரசு முடிவுகளைத் தாமதமாக எடுப்பது. கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நிலவழித் தொலைபேசி மற்றும் செல்பேசி வாடிக்கையாளர்களை இதனாலேயே பிஎஸ்என்எல் இழந்தது.
2007-ல் 450 லட்சம் இணைப்புகளுக்கான கருவிகளை வாங்குவதற்கான டெண்டரை ஐமுகூ அரசு ரத்துசெய்தது. 2010-ல் 930 லட்சம் இணைப்புகளுக்கான கருவிகளை வாங்குவதற்கான டெண்டரும் ரத்துசெய்யப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சரிவு அப்போதுதான் தொடங்கியது. 2007 தொடங்கி 5 ஆண்டுகளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய கருவிகளை வாங்க முடியாமல் தடுக்கப்பட்டது. 2008-09 வரையில் அந்நிறுவனம் லாபம் ஈட்டியது. அதன் பிறகுதான் இந்த இழப்பு ஏற்பட்டது. அடுத்து நஷ்டத்தில் சிக்கியபோது, கேபிள்கள், கருவிகள், வயர்கள், பிராட்பேண்ட் மோடம்கள் வாங்க முடியாமல் பிஎஸ்என்எல் பாதிப்புக்கு உள்ளானது.
இது மட்டும் அல்ல, இப்படி நிறைய. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் அது ஒப்படைத்த அலைக்கற்றை வரிசைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. அதற்கு அளித்து வந்த மானியங்களும் நிறுத்தப்பட்டன. கடந்த 15 ஆண்டுகளில் 1.5 லட்சம் ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றனர். இதே காலத்தில் வெறும் 30,000 பேர் மட்டுமே புதிதாகப் பணியில் சேர்க்கப்பட்டனர்.
திட்டமிட்டே ஆள் பற்றாக்குறை ஏற்படுத்தப்பட்டது. மற்ற தனியார் நிறுவனங்கள் சேவைக் கட்டணத்தை உயர்த்தியபோதும் பிஎஸ்என்எல் உயர்த்த அனுமதிக்கப்படவில்லை. செல்பேசி சேவையில் பிற நிறுவனங்களுக்கு 1995 முதலே செயல்படுவதற்கான உரிமம் வழங்கப்பட்டாலும் பிஎஸ்என்எல் 2 ஆண்டுகளுக்குப் பிறகே அந்த உரிமத்தைப் பெற முடிந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் அடுத்த அடி கொடுக்க அரசு தயாராகியிருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 75,000 செல்பேசிக் கோபுரங்களில் 61,000-த்தைத் தனியாகப் பிரித்து, சார்புக் கோபுர நிறுவனத்தை அமைக்கப்போவதாக அரசு அறிவித்திருக்கிறது. இத்துறையின் தொழிற்சங்க அமைப்புகளுக்கே இந்தச் செய்தி ஊடகங்கள் வாயிலாகத்தான் தெரிந்தது. இதற்கு அரசு சொன்ன காரணம் என்ன தெரியுமா? பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சொத்துகளைச் சிறப்பாகப் பராமரிப்பதற்காக இந்த முடிவை எடுக்கிறார்களாம்.
உண்மையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது செல்பேசிக் கோபுரங்களைத் தனியார் நிறுவனங்களுடன் பகிர்ந்துகொண்டு அதற்கு வாடகை பெறுகிறது. ஆக, அரசின் புதிய முடிவு அவற்றைத் தனியார் கையில் ஒப்படைக்கவும், பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பலவீனப்படுத்தவுமே உதவும். மேலும், படிப்படியாக இந்நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கவும் வழிவகுக்கும்.
பிஎஸ்என்எல் மக்களுக்கான நிறுவனம். மக்களுடைய நிறுவனம். இதை மக்கள் உணர வேண்டும்!
© ஃபிரண்ட்லைன் by
No comments:
Post a Comment