Sunday 15 September 2013

போர் வியூகத்துக்கு ஒரு தற்காலிக தடை


போர் வியூகத்துக்கு ஒரு தற்காலிக தடை

உலக அளவில் ஒரு போர்ப் பதற்றத்தை மட்டுமல்லாமல் பொருளாதாரப் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருப்பது சிரியா நாட்டின் அரசியல் சூழல். அதே வேளையில், சிரியாவின் உள்நாட்டு நிலைமையை அமெரிக்க ஏகாதிபத்தியம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயன்று வருவதையும் உலகம் காண்கிறது.
சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு பலர் கொல்லப்பட்ட பின்னணியில், யார் காரணம் என்று கண்டறிய அங்கே அனுப்பப்பட்ட ஐ.நா. ஆய்வுக்குழு தனது பணியை முடித்து முடிவை வெளியிடுவதற்கு முன்பாகவே, அரசுதான் குற்ற வாளி என்று அறிவித்தது ஒபாமா நிர்வாகம். அதன் ரசாயன ஆயுதங்களை அழிப்பதற்காக எனக்கூறி போர் தொடுக்கிற முயற்சிகளிலும் ஒபாமா இறங்கினார்.அதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்புக் கிளம் பியது.
அமெரிக்காவிலேயே 65 விழுக்காடு மக்கள் போரை விரும்பவில்லை என்று கருத் துக் கணிப்புகள் தெரிவித்தன. பிரிட்டன் அரசு போருக்கு ஆதரவளிக்க முடிவு செய்தபோது, அந்நாட்டு நாடாளுமன்றம் அதை நிராகரித்தது. சிரியா தொடர்பான எந்தவொரு நடவடிக்கை யையும் ஐ.நா. முடிவுப்படிதான் மேற்கொள்ள வேண்டுமேயன்றி அமெரிக்கா தன்னிச்சையா கச் செயல்படக்கூடாது என்று பல நாடுகளும் கருத்துத் தெரிவித்தன.
இச்சூழலில் ரஷ்யா திட்டவட்டமான நிலைபாட்டை மேற்கொண்டு, போர் நடவடிக்கையை உறுதியாக எதிர்த்த தோடு, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டது. அமெ ரிக்க மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எழுதிய கடிதம் அமெரிக்கப் பத்திரிகையில் வெளியானது.தற்போது ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரவ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி இருவருக்கும் இடையே ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தையின் பலனாகக் கையெழுத்தாகி யுள்ள அந்த உடன்பாட்டின்படி சிரிய அரசு அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் தனது ரசாயன ஆயுதங்களை சர்வதேசக் குழுவிடம் ஒப்படைத்துவிட வேண்டும். சர்வதேசக் குழு வால் அந்த ஆயுதங்கள் அழிக்கப்படும். சிரியா ஒத்துழைக்கவில்லை என்றால் பின்னர் ஐ.நா. முடிவுப்படியே அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்ல வேண்டும்.
சிரிய அரசு ஏற்கெனவே இப்படிப்பட்ட ஏற் பாட்டிற்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. ஆகவே இந்த உடன்பாடு ஒரு ஆக்கப்பூர்வமான தீர்வுக்கு இட்டுச் செல்ல உதவும். அதே வேளையில், சிரியாவில் அரசுக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சிகளை நடத்திவரும் குழுக்கள் இதற்கு ஒத்துழைப்பார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. அவற்றில் சில குழுக்கள் அமெரிக்க நிதியுதவியோடும் ஆயுத உதவி யோடும் செயல்பட்டு வருபவை.
ரசாயன ஆயு தங்களை அவர்கள்தான் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்த உடன்பாடு தங்களைக் கட்டுப்படுத்தாது என்று சில குழுக் கள் கூறியிருக்கின்றன. எனினும், அமெரிக்க அரசின் போர்வெறி வியூகத்திற்கு ஒரு இடைக் காலத் தடை ஏற்பட்டிருப்பது உண்மை. சிரியா வில் அமைதி திரும்பவும், அந்நாட்டு அரசிய லை அதன் மக்களே தீர்மானிக்கவும் இது இட்டுச் செல்ல வேண்டும் என்பதே உலகத் தின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment