Saturday 18 April 2015

பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஏன்?







பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஏன்?



இந்த வேலை நிறுத்தம் 2.5 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகளின் வாழ்வாதாரப் போராட்டமாகும். பி.எஸ்.என்.எல். புத்தாக்கம் செய்யப்பட்டால் மட்டுமே குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு தொலைதொடர்பு சேவைகள் கிட்டும். இப்பொதுத்துறை பாதுகாக்கப்படவில்லையெனில், தனியார் நிறுவனங்கள் கட்டணத்தை பெருமளவு உயர்த்தி மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும்.
நாடு முழுவதிலுமுள்ள 2.5 லட்சம் பி.எஸ்.என்.எல். ஊழியர்களும், அதிகாரிகளும் இணைந்து ‘பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் ஒன்றுபட்ட கூட்டமைப்பின்’ சார்பில் ஏப்ரல் 21, 22 தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் இறங்கவுள்ளனர்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை புத்தாக்கம் செய்யக் கோரி இந்த வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது.இந்திய தொலைத் தொடர்புத்துறை என்பது நாட்டின் இரண்டாவது பாதுகாப்பு அரணாகும். 2000ம் ஆண்டு வரை முழு அரசுத்துறையாக நாளன்றுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டி வந்த இந்தத் துறையில் 1990களில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, தாராளமய, தனியார் மயக்கொள்கைகளைப் புகுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியது.
பின்னர் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசு 2000ம் ஆண்டில் டெலிகாம் துறையை பி.எஸ்.என்.எல்.என்ற பொதுத்துறையாக மாற்றியது. போட்டியைச் சந்திப்பதற்காகவும், இன்னும் சிறந்த சேவை கொடுப்பதற்காகவுமே, இந்த நடவடிக்கை என்று சொல்லப்பட்டது. கார்ப்ப ரேஷனாக மாற்றுவது தனியார்மயத்தின் முதற்படி என்று அப்போதே சில தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்தன.
இருப்பினும் பணிப் பாதுகாப்பு, அரசு பென்ஷன், பி.எஸ்.என்.எல்.லின் நிதியாதாரம் பாதுகாப்பு ஆகிய மூன்று உறுதி மொழிகளைக் கொடுத்து கார்ப்பரேஷனாக மாற்றியது மத்திய அரசு. ஆனால் மாறி மாறிஆட்சிக்கு வந்த பா.ஜ.க., காங்கிரஸ் அரசு களின் பொதுத்துறைக்கெதிரான, தனியாருக்கு ஆதரவான கொள்கைகளால் இந்த உறுதிமொழிகள் தற்போது கைவிடப்படும் நிலையில் உள்ளன.
திட்டமிட்ட சீரழிப்பு
2004 -2005ல் ரூ.10,183/ கோடி லாபம் ஈட்டி,தொடர்ந்து 2009 வரை லாபகரமாக இயங்கிவந்த பி.எஸ்.என்.எல். கடந்த 5 ஆண்டு களாக ரூ.30,000/ கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் காங்கிரஸ்,பா.ஜ.க. அரசுகள் இச்சேவை நிறுவனத்தை நலிவடையச் செய்யும் நடவடிக்கைகளையே மேற்கொண்டு வந்துள்ளன.
இதற்கு ஆதாரப்பூர்வமான பல தகவல்கள் உள்ளன. முதலாவதாக, மொபைல் சேவையை பொறுத்தவரை 1995ல் தனியார் நிறுவனங்களை மொபைல் சேவையில் அனுமதித்த மத்திய அரசு, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகே பி.எஸ்.என்.எல்.லுக்கு அதற்கான லைசென்ஸ் அளித்தது. தனியார் கள் தங்களது சேவைகளைப் பரவலாக்கு வதற்கு வாய்ப்பும், வசதியும் அரசால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. தாமதமாக அனுமதிக்கப்பட்டாலும், பி.எஸ்.என்.எல். இரண்டே ஆண்டுகளில் மொபைல் சேவையில் முதல் இடத்தைப் பிடித்தது.
அதுவரை தனியார் நிறுவனங்கள் அதிக கட்டணத்தை வசூலித்து மக்களை கொள்ளையடித்து வந்தது தடுக்கப்பட்டு, குறைவான கட்டணத்தில் பி.எஸ்.என்.எல். சிறப்பான சேவைகளை அளித்ததால் முதன்மையாக வந்தது. இதைப்பொறுக்க முடியாத தனியார் நிறுவனங்கள் அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்ததன் அடிப்படையில் பி.எஸ்.என்.எல்.லின் மொபைல் சேவையை முடக்கும் எண்ணத்தில் 4.5 கோடி ஜி.எஸ்.எம். கருவிகளை தருவிப்பதற்கான டெண்டரை அரசு நிறுத்தி வைத்தது. 2007 ஜூலை 11ல் அதிகாரிகளும், ஊழியர்களும் இணைந்து வேலை நிறுத்தம் செய்ததின் விளைவாக 2.25 கோடி இணைப்புக்கான கருவிகளை வாங்க அரசு ஒப்புக் கொண்டது.
தொடர்ந்து வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யாதது, டவர்கள் உள்ளிட்ட மொபைல் சேவைக்கான கருவிகளை பெற்றுத் தராதது போன்ற காரணங் களினால் பி.எஸ்.என்.எல். மொபைல் சேவைகளின் தரம் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தனியார் நிறுவனங்கள் தேவையான நவீன கருவிகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி அளித்தும், வங்கிக் கடன் பெற தாராளமாக உதவியும் ஆதரவும் அளித்தது மத்திய அரசு.
சீன ஹ¨வாவே கம்பெனியிடமிருந்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் கருவிகளை வாங்குவதற்கு தடைபோட்ட மத்திய அரசு, அதே சீனக் கம்பெனியிடமிருந்து கருவிகள் வாங்க தனியார் கம்பெனிகளுக்கு மட்டும் அனுமதி அளித்தது. 4ஜி சேவைகளை ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் வேகமாகத் துவங்கியுள்ள நிலையில், பி.எஸ்.என்.எல். இச்சேவையை துவங்க தேவையான கருவிகளை பெற்றுத்தராமல் தாமதப் படுத்துகிறது மத்திய அரசு. இதேபோன்று லேண்ட் லைன், பிராட்பேண்ட் சேவைகளிலும் இந்நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளும் நடவடிக்கைகளையே மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
கேபிள்கள், டெலிபோன் கருவிகள், பிராட்பேண்ட் மோடம்கள், டிராப் ஒயர், ஜம்பர் ஒயர் ஆகியஎதையும் தேவையான அளவு தருவித்துக்கொடுக்காத காரணத்தினால் இச்சேவை களிலும் வளர்ச்சி குன்றி வருகிறது. பி.எஸ்.என்.எல். மட்டும்தான் வாடிக்கையாளர்களுக்கு குறைவான கட்டணத்தில் சேவைகளை கொடுத்து வருகிறது. தனியார் கம்பெனிகள் உண்மையில் மக்களுக்கு சேவை வழங்க வரவில்லை. இலாப நோக்கிலேயே அவை செயல்படுகின்றன.
தள்ளாடும் நிதி நிலைமை
தற்போது பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நிதி நிலைமை மிகுந்த நெருக்கடிக்குள்ளாகி உள்ளது. மத்திய அரசு இந்நிறுவனத்திற்குச் சேர வேண்டிய நிதியை திருப்பிக் கொடுத்தாலே நிதி நிலைமை பெருமளவு சீராகும்.
உதாரணமாக,
பி.எஸ்.என்.எல். நிறுவனம் கிராமப்புற மக்களுக்கு தொலைபேசி இணைப்புகளை கொடுப்பதற்கு ஆண்டுதோறும் ரூ.10,000/ கோடி சுமையைத் தாங்குகிறது. இதனை ஈடுகட்ட இழப்பீடு தருவதாக உறுதியளித்த மத்திய அரசு கடந்த 14 ஆண்டுகளில் தர வேண்டிய ரூ.1 லட்சம் கோடிகளில் ரூ.40,000/ கோடியை மட்டுமே தந்துள்ளது. பாக்கியுள்ள ரூ.60,000/ கோடியைத் தராமல் ஏமாற்றியுள்ளது.பி.எஸ்.என்.எல்.க்கு உபயோகமற்றது என்றுதிருப்பிக் கொடுத்த பிடபிள்யுஏ அலைக்கற்றைக்கு இந்நிறுவனத்திடமிருந்து அரசு வசூலித்த தொகையைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய ரூ.6724 கோடி இன்னும் வழங்கப்படவில்லை. இவ்வாறு வேண்டுமென்றே நிதி நெருக்கடியை மேலும் தீவிரமாக்கி இதை நலிவுற்ற நிறுவனமாக அறிவித்து மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை சீரமைக்கும் கமிட்டிக்கு பி.எஸ்.என்.எல்.ஐ பரிந்துரைக்கவும் திட்டமிடுகிறது மத்திய அரசு.
எனவே
நிலுவை தொகைகளை உடனடியாக மத்திய அரசு இப்பொதுத்துறைக்கு வழங்கிட வேண்டும்.
வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் தேவை யான அனைத்து கருவிகளையும் தடையின்றி தருவிக்க வேண்டும்.
விரிவாக்கத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மத்திய அரசு / மாநில அரசுத் துறைகள் பி.எஸ். என்.எல். சேவைகளைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும்.
ஏற்கனவே நலிவுற்ற எம்.டி.என்.எல்&ஐ, பி.எஸ். என்.எல்.லுடன் இணைப்பதைக் கைவிட வேண்டும்.
பி.எஸ்.என்.எல். வழங்கி வந்த பிராட்பேண்ட் சேவைகளை தருவதற்கு பி.பி.என்.எல். என்று துவக்கப்பட்டுள்ள துணை நிறுவனத் தை பி.எஸ்.என்.எல்.லுடன் இணைக்க வேண்டும்.
உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தும் பி.எஸ்.என்.எல்.ஐ புத்தாக்கம் செய்யக் கோரியும் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு போராட்டங்கள், பொதுமக்களிடம் 1 கோடி கையெழுத்து இயக்கம், பிரதமருக்கு மனு ஆகிய இயக்கங்கள் நடைபெற்றுள்ளன. பெருமுதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஆண்டுதோறும் சுமார் ரூ.5 லட்சம் கோடி வரிச்சலுகைகளை அளித்து வரும் மத்திய அரசு, தனது சொந்த நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு எவ்வித நிதி உதவியும் அளிக்காமல் இத்துறையை சீரழிக்கும் கொள்கைகளை கைவிட வேண்டும் என்று கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. வரும் ஏப்ரல் 21, 22 தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை நடத்தவும் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.
நாடு தழுவிய அளவில் இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க தயாரிப்புப் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.சென்னை தொலைபேசியில் பணி புரியும் 8 ஆயிரம் ஊழியர்களும், அதிகாரிகளும் ஒன்றிணைந்து முழுமையாக இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவது என முடிவு எடுத்துள்ளனர்.இந்த வேலை நிறுத்தம் 2.5 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகளின் வாழ்வாதாரப் போராட்ட மாகும். பி.எஸ்.என்.எல். புத்தாக்கம் செய்யப்பட்டால் மட்டுமே குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு தொலைதொடர்பு சேவைகள் கிட்டும்.இப்பொதுத்துறை பாதுகாக்கப்படவில்லை யெனில், தனியார் நிறுவனங்கள் கட்டணத்தை பெருமளவு உயர்த்தி மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும். இப்பொதுத்துறை நாட்டுமக் களின் சொத்து. இதில் ஈட்டப்படும் அனைத்து வருவாயும் அரசின் மக்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்பட்டு வருகிறது. இதைப் பாதுகாப்பது தேசத்தைப் பாதுகாப்பதற்கு ஒப்பாகும். பி.எஸ்.என்.எல்.லின் அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் ஒன்றுபட்டு ஒரேகுடையின் கீழ் உணர்வுப்பூர்வமாக ஈடுபடும் இந்த வேலை நிறுத்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

கட்டுரையாளர், கன்வீனர், பி.எஸ்.என்.எல்.ஊழியர்கள் / அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, சென்னை தொலைபேசி.

No comments:

Post a Comment