Wednesday 26 March 2014

இலக்கியத் திறனாய்வாளர் தி.க.சி. காலமானார்




இலக்கியத் திறனாய்வாளர் தி.க.சி. காலமானார்

          தி.க.சி. என அனைவராலும் அறியப்படும் இலக்கியத் திறனாய்வாளர் தி.க. சிவசங்கரன் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 89.
          சிறிது நாள்கள் உடல்நலமின்றி திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.க.சி.யின் உயிர் இரவு 10.30 மணிக்கு பிரிந்தது.

          மூத்த இலக்கியச் செயற்பாட்டாளரும், முற்போக்கு இலக்கியவாதிகளின் வழிகாட்டியாகவும் விளங்கிய இவர், திருநெல்வேலியில் 1925ஆம் ஆண்டு மார்ச் 30-ல் கணபதியப்பன், பர்வதம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தனது 11ஆவது வயது முதலே "தன்னை செதுக்கிய சிற்பி மகாகவி பாரதி' என்பதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நினைவுகூர்ந்தவர்.
          1941 ஜூன் மாதம் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இண்டர் மீடியட் வகுப்பில் சேர்ந்தார். 1945 முதல் 1964ஆம் ஆண்டு வரை வங்கி ஊழியராகவும், தொழிற்சங்கவாதியாகவும் தமிழகத்திலும், கேரளத்திலும் இவர் பெற்ற அனுபவங்களை ஒரு நாவலாக சித்தரிக்க வேண்டும் என்பதே இவரது பேராசை. அது நிறைவேறாமலேயே போனது.
          1941ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எழுத்தாளர் வ.ரா.வின் பாணியில் நடைச் சித்திரங்கள் எழுதப் பழகி, பிறகு கதாசிரியராக மாறினார். கவிஞர், நாடகாசிரியர், சினிமா விமர்சகர், இலக்கிய விமர்சகர், பத்திரிகையாளர், திறனாய்வாளர், இலக்கியச் செயற்பாட்டாளர் என பல்வேறு தளங்களில் பரிணமித்தவர்.
          இவரது "விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள்' என்ற நூலுக்காக 2000-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசின் இலக்கிய விருது, பாரதிய இலக்கிய விருது, லில்லி தேவசகாயம் இலக்கிய அறக்கட்டளை விருது, தமிழ்ச் சான்றோர் பேரவை விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
          இன்றளவும் திறனாய்வாளர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார். அரை நூற்றாண்டுக்கு முன்பே இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் பிரேம்சந்த், முல்கராஜ் ஆனந்த், சஜ்ஜாத் ஜாகிர் ஆகியோரால் தொடங்கப்பட்டு, நேரு, சரோஜினி நாயுடு, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரால் ஆதரிக்கப்பட்டு இன்றளவும் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தமிழகத்தில் வரவேற்று வளர்த்த முதன்மையானவர்களில் ஒருவர்.
          72 ஆண்டு கால இலக்கிய அனுபவத்தைக் கொண்டிருந்தார். கருத்து வேறுபாடுகளும், முரண்பாடுகளும் நிரம்பியவர்கள்கூட தி.க.சியை உணர்வுபூர்வமாக நேசித்து வந்ததே இவரது ஆளுமையின் தனித்த வெளிப்பாடுக்கு கிடைத்த சான்றாக உள்ளது. இவரது இலக்கியப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட படைப்பாளிகளே இன்றைய தலைமுறை எழுத்தாளர்களாக தமிழிலக்கிய உலகில் ஜொலித்துக் கொண்டுள்ளனர். இவருக்கு கணபதி, வண்ணதாசன், சேது என்ற மகன்களும், ஜெயலட்சுமி, பருவதகுமாரி, கௌரி என்ற மகள்களும் உள்ளனர். இவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு திருநெல்வேலியில் நடைபெறுகிறது. தொடர்புக்கு 97916 17421.
        இளம் தலைமுறை எழுத்தாளர்களின் எழுத்திற்கு உந்து சக்தியாக இருந்து பலரையும் எழுத்தாளர்களாக்கிய தோழரின் மறைவிற்கு நமது மாவட்டச் சங்கம் தன் அஞ்சலியை உரித்தாக்குகிறது.

No comments:

Post a Comment